பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியது
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியது.;
ஆண்டு இறுதித்தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கி கடந்த 3-ந் தேதியுடனும், பிளஸ்-1 வகுப்புகளுக்கு கடந்த மாதம் 14-ந் தேதி தொடங்கி கடந்த 5-ந் தேதியுடனும், எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புகளுக்கு கடந்த 6-ந் தேதி தொடங்கி 20-ந் தேதியுடனும் பொதுத்தேர்வு முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வு அந்தந்த பள்ளிகளில் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்திலும் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு இறுதித்தேர்வு நடந்தது. மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிகளில் நேற்றுடன் இறுதித்தேர்வு முடிவடைந்தது. மேலும் பள்ளிகளுக்கு நேற்று இறுதி வேலை நாளாகும்.
மாணவ-மாணவிகள் உற்சாகம்
இந்த நிலையில் ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்ததோடு கோடை விடுமுறை தொடங்கியதால் மாணவ-மாணவிகள் நேற்று மாலை உற்சாகத்தோடு பள்ளியில் இருந்து வெளியே வந்தனர். மேலும் ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை தூவி மகிழ்ந்தனர். மேலும் புத்தக பைகளை சுமந்து கொண்டும், சுழற்றிக்கொண்டும் பள்ளியில் இருந்து வெளியே ஓடி வந்தனர்.
புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் பள்ளியை விட்டு வெளியே வந்ததும் ஒருவர் மீது ஒருவர் பாட்டிலில் இருந்த தண்ணீரை ஊற்றி மகிழ்ந்தனர். மேலும் வண்ண பொடிகளை தூவினர். தோழிகள் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி வீட்டிற்கு புறப்பட்டனர். இதேபோல புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் சீருடையில் இல்லாமல் வண்ண நிற உடை அணிந்து பள்ளிக்கு வந்திருந்தனர். அவர்கள் உற்சாகத்தோடு பள்ளியில் இருந்து புறப்பட்டு சென்றனர்.
அன்னவாசல்
மேலும் அன்னவாசல் பகுதியில் இலுப்பூர், மலைக்குடிப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, அன்னவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் உற்சாகமாக ஒருவரையொருவர் கட்டித்தழுவி பிரியா விடைபெற்றனர். சிலர் ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை பூசியும், மையை தெளித்தும் விடுமுறையின் மகிழ்ச்சியை கொண்டாடினர். தனியார் பள்ளி மாணவர்கள் வாகனத்தில் உற்சாகத்துடன் ஆட்டம், பாட்டத்துடன் மகிழ்ச்சி பொங்க சென்றனர்.
பள்ளிகள் திறப்பு தேதி
தமிழகத்தில் 6 முதல் பிளஸ்-2 வகுப்புகளுக்கு ஜூன் மாதம் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதேபோல் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு ஜூன் 5-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.