தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் கோடைவிழா நிறைவு

தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் கோடைவிழா நிறைவடைந்தது

Update: 2023-06-25 20:00 GMT

தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் 5 நாட்கள் நடந்த கோடை விழா நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் வெளிமாநில கலைஞர்களின் நடனங்களை பார்த்து பொதுமக்கள் வியந்தனர்

கோடை விழா

தஞ்சையில் தென்னக பண்பாட்டு மையம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் கோடை விழா நடைபெற்று வருகிறது.. அதன்படி இந்த ஆண்டு கோடை விழா கடந்த 21-ந்தேதி தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் பங்கேற்க வந்த சிறப்பு விருந்தினர்களை அனைத்து மாநில கலைஞர்களும் வரிசையாக நின்று தங்கள் பாரம்பரிய நடனங்களை ஆடி வரவேற்றனர்.

இந்த கோடை விழாவை தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் முரசு கொட்டி தொடங்கி வைத்தார். இந்த கலைவிழாவில் தமிழ்நாடு, ஒடிசா, மேற்கு வங்காளம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, மராட்டியம், ஜார்கண்ட், உத்திரபிரதேசம் உள்பட பல்வேறு மாநில கலைஞர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

400 கலைஞர்கள் பங்கேற்பு

தினமும் மாலை 6.30 மணிக்கு கலை விழா தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெற்றது. 5 நாட்கள் நடந்த இந்த கலைவிழாவில் இந்தியாவின் 15 மாநிலங்களை சேர்ந்த 400 கலைஞர்கள் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளை வழங்கினர். சிறுவர்கள், பெரியவர்களை மகிழ்விக்கும் வகையில் ராட்டினங்களும் இடம் பெற்று இருந்தன.மேலும் கோடை விழாவையொட்டி பழங்குடியினர் கூட்டுறவு விற்பனை வளர்ச்சி கூட்டமைப்பு சார்பில் அசாம், ராஜஸ்தான், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை சேர்ந்த கைவினை கலைஞர்களின் பொருட்கள் கண்காட்சியும், உணவு திருவிழாவும் நடைபெற்றது.

பொதுமக்கள் வியப்பு

நேற்று நிறைவு நாள் அன்று தமிழகத்தின் பாரம்பரிய நடனமான பரதநாட்டியம், உத்திரபிரதேசம் மற்றும் ஜார்கண்ட், கேரள மாநிலங்களை சேர்ந்த பாரம்பரிய நடனங்கள் நடைபெற்றன.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. வெளிமாநில கலைஞர்களின் நடனத்தை பார்த்து பொதுமக்கள் வியந்தனர். ஒவ்வொரு நடன நிகழ்ச்சி முடிவடைந்ததும், அந்த மாநில கலைஞர்கள் தென்னக பண்பாட்டு மையம் சார்பில் கவுரவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்