தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தாய், மகள்கள் தீக்குளிக்க முயற்சி-போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை
தர்மபுரி:
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தாய் மற்றும் 3 மகள்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
தீக்குளிக்க முயற்சி
தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மனு அளிக்க வந்த பொம்மிடி பகுதியை சேர்ந்த முருகன் என்பவருடைய மனைவி சின்ன பாப்பா மற்றும் அவருடைய 3 மகள்கள் பையில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை தங்கள் உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
அப்போது அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் ஓடிச் சென்று 4 பேரின் தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
கொலை மிரட்டல்
அப்போது நிலப்பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து தீக்குளிக்க முயன்றவர்களில் ஒருவரான மலர் அளித்த கோரிக்கை மனுவில், எங்களுக்கு ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் உறவினர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். இந்தநிலையில் எங்கள் தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். அவருடைய சாவில் சந்தேகம் உள்ளது.
எனவே போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும். எங்களுக்கு உரிய நிலத்தை அபகரிக்கும் நோக்கத்துடன் மிரட்டல் விடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இது குறித்து அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தாய் மற்றும் 3 மகள்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.