பரமத்திவேலூர்:
ஜேடர்பாளையத்தில் போக்சோ வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜாமீனில் வந்தார்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் மகேஷ் (வயது 22). கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் பரமத்திவேலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மகேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி ஜாமீனில் வெளியே வந்த மகேஷ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் மகஷே் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விசாரணை
இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மகேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.