கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் என்ஜினீயர் உள்பட 4 பேர் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் என்ஜினீயர் உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
பர்கூர்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் என்ஜினீயர் உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
டிரைவர்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள குந்தம்பட்டியை சேர்ந்தவர் டான் போஸ்கோ (வயது 57). டிரைவர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவர் உடல் நலக்குறைவு காரணமாக கிருஷ்ணகிரியில் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
இதனால் மனமுடைந்த டான் போஸ்கோ வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
என்ஜினீயர்
போச்சம்பள்ளி தாலுகா பன்னந்தூரை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் (24). என்ஜினீயர். இவர் வேலை தேடி வந்த நிலையில் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்த கிருஷ்ணராஜ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை, குடும்பத்தினர், உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரியில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனியார் நிறுவன ஊழியர்
உத்தரபிரதேச மாநிலம் ஜகன்பூரை சேர்ந்தவர் மனோஜ்குமார் (55). இவர் ஓசூரில் தர்கா ஹவுசிங் காலனி பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த மனோஜ்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொழிலாளி
ஊத்தங்கரை அருகே உள்ள கீழ்மத்தூரை சேர்ந்தவர் முனியப்பன் (38). கூலித் தொழிலாளி. உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் அந்த பகுதியில் உள்ள மரம் ஒன்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.