மொரப்பூர்:
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள கேத்து ரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த திருப்பதி மகள் முருகம்மாள் (வயது 22). இவருக்கும் மொரப்பூர் அருகே நைனா கவுண்டம்பட்டியை சேர்ந்த கோவிந்தன் மகன் அசோக் (27) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று முருகம்மாள் வீட்டில் விஷம் குடித்து வாந்தி எடுத்து கொண்டிருந்தார். இதனால் குடும்பத்தினர் அவரை மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கும் பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். அங்கு முருகம்மாள் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து முருகம்மாளின் தந்தை திருப்பதி மொரப்பூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ்-இன்ஸ்பெக்டர் வான்மதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திருமணமான 10 மாதங்களுக்குள் இளம்பெண் இறந்துள்ளதால் இதுகுறித்து அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் விசாரணை நடத்துகிறார்.