சேலத்தில் குடும்ப பிரச்சினையில் விபரீதம்:கிணற்றில் குதித்து கணவன், மனைவி தற்கொலைபோலீசார் விசாரணை

Update: 2023-08-03 20:15 GMT

சூரமங்கலம்

சேலத்தில் குடும்ப பிரச்சினையில் கிணற்றில் குதித்து கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்டனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிமெண்டு கற்கள்

சேலம் திருவாக்கவுண்டனூர் அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி மூலக்காடு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 35). இவருடைய மனைவி சீதா (32). இவர்கள் இருவரும் சேலத்தில் உள்ள சிமெண்டு கற்கள் (ஹாலோ பிளக்ஸ்) தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். அவர்களுக்கு லோகபிரியா (14) என்ற மகளும், கவுதம் (11) என்ற மகனும் உள்ளனர்.

சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் லோகபிரியா 9-ம் வகுப்பும், கவுதம் 7-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். குடும்ப பிரச்சினை காரணமாக பழனிசாமி, சீதா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலையிலும் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

கிணற்றில் குதித்து தற்கொலை

அப்போது சீதா கணவருடன் கோபித்து கொண்டு வீட்டைவிட்டு வெளியே வேகமாக சென்றார். அப்போது அவர் தற்கொலை செய்யும் நோக்கத்தில் அதே பகுதியில் உள்ள கிணற்றுக்கு சென்றார். அங்கு அவர் கிணற்றில் குதித்தார். இதை பார்த்த பழனிசாமியும் கிணற்றுக்குள் குதித்தார். பின்னர் இருவரும் சிறிது நேரத்துக்குள் தண்ணீர் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

தாய், தந்தை கிணற்றுக்குள் குதித்ததை பார்த்த லோகபிரியா சத்தம் போட்டு கூச்சலிட்டார். இதை கேட்டு அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் அங்கு விரைந்து வந்தனர்.

பின்னர் இதுகுறித்து அவர்கள் சூரமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் உதவி கமிஷனர் நிலவழகன், இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

மேலும் அங்கு செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் சிராஜ் அல்வனீஸ் தலைமையில் வீரர்களும் வந்தனர். பின்னர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பழனிசாமி, சீதாவின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

போலீசார் விசாரணை

அப்போது அவர்களது உடல்களை பார்த்து குழந்தைகள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதையடுத்து பழனிசாமி, சீதா உடல்களை போலீசார் மீட்டு பிரேதபரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப பிரச்சினையில் கணவன், மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்