கரும்புச்சாறு வியாபாரிகள் கரும்புகள் கிடைக்காமல் திண்டாட்டம்
கும்பகோணம் பகுதியில் கரும்பு சாகுபடி பெருமளவு குறைந்ததால் கரும்புச்சாறு விற்பனை குறைந்துள்ளது.;
கும்பகோணம்;
கும்பகோணம் பகுதியில் கரும்பு சாகுபடி பெருமளவு குறைந்ததால் கரும்புச்சாறு விற்பனை குறைந்துள்ளது.
கரும்பு சாகுபடி
கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான விவசாயிகள் கரும்புகளை பயிர் செய்வது வழக்கம். சாகுபடி செய்யப்படும் கரும்புகளை விவசாயிகள் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் இயங்கி வந்த சர்க்கரை ஆலைகளுக்கு மொத்தமாக விற்பனை செய்தும் கோடை காலத்தில் கரும்புச்சாறு விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு சில்லறை விலையிலும் விற்பனை செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் இருந்த சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டது.மேலும் சர்க்கரை ஆலை நிர்வாகத்தில் இருந்து விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நிலுவைத் தொகை வரவு வைக்கப்படாமல் இருந்து வருவதாக விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்வதில் ஆர்வமின்றி மாற்றுப் பயிர்களை சாகுபடி செய்ய தொடங்கியுள்ளனர்.
அதிக விலை
இதனால் கும்பகோணம் பகுதியில் கரும்புச்சாறுக்கு கரும்பு கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக கோடை காலங்களில் கும்பகோணம் பகுதியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட கரும்புச்சாறு கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகள் மூலம் ஏராளமானோர் கரும்புகளை வாங்கி சாறு பிழிந்து வியாபாரம் செய்வது வழக்கம். கோடைகாலத்தில் கரும்புச்சாறை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி அருந்துவாா்கள். எனவே பலர் கோடைகாலத்தில் கரும்புகளை வாங்கி சாறு பிழிந்து வியாபாரம் செய்து வருமானம் ஈட்டி வந்தனர்.தற்போது கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் ஆலைக் கரும்பு சாகுபடி செய்வதை விவசாயிகள் நிறுத்தியுள்ளதால் கரும்புச்சாறு விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். ஒரு சிலர் வெளி மாவட்டங்களில் இருந்து லாரிகளில் ஏற்றி கொண்டுவரப்படும் கரும்புகளை அதிக விலை கொடுத்து வாங்கி சாறு பிழிந்து விற்பனை செய்து வருகின்றனர்.
வியாபாரிகள் வேதனை
வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் கரும்புகள் வெயிலில் காய்ந்துவிடுவதால் அவற்றிலிருந்து போதிய அளவு சாறுகிடைக்காமல் சாறு தயாரிக்க அதிக அளவு கரும்புகளை பயன்படுத்த வேண்டி உள்ளது. இதனால் வழக்கத்தை விட அதிக அளவு கரும்புகளை அதிக விலை கொடுத்து வாங்கி சேமித்து வைத்து சாறு தயாரித்து விற்பனை செய்கிறாா்கள்.இதனால் வழக்கமாக கிடைக்கும் வருமானத்தை விட தற்போது குறைந்த அளவு வருமானமே கிடைக்கிறதுஎன வேதனையுடன் கரும்புச்சாறு வியாபாாிகள் தெரிவித்தனர்.