செங்கரும்பு அறுவடை மும்முரம்
எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவிரி பாசன பகுதியில் தற்போது முதல் போக செங்கரும்பு அறுவடை செய்யும் பணி தொடங்கி உள்ளது. இங்கு அறுவடை செய்யப்படும் கரும்புகள் பெரும்பாலும் கேரளா, மராட்டியம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
எடப்பாடி:-
எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவிரி பாசன பகுதியில் தற்போது முதல் போக செங்கரும்பு அறுவடை செய்யும் பணி தொடங்கி உள்ளது. இங்கு அறுவடை செய்யப்படும் கரும்புகள் பெரும்பாலும் கேரளா, மராட்டியம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
செங்கரும்புகள் அறுவடை
பூலாம்பட்டி அருகே உள்ள பில்லுக்குறிச்சி, கூடக்கல், குப்பனூர், மோலப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் செங்கரும்பை பயிர் செய்து வருகின்றனர். குறிப்பாக உருட்டு சம்பா, சன்ன சம்பா, வெடி கரும்பு, ரஸ்தாலி கரணை உள்ளிட்ட உயர் ரக சுவையான செங்கரும்புகள் இந்த பகுதியில் அதிக அளவு சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
மண் வளமும், போதிய நீர் ஆதாரமும் கொண்ட காவிரி பாசன பகுதியில் விளையும் செங்கரும்புகள், தனிச்சுவையுடன் இருப்பதால், நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு இங்கு விளையும் கரும்புகள் விற்பனைக்கு கொண்டு ெசல்லப்படுகின்றன.
இந்த ஆண்டு காவிரி ஆற்றில் பாசன பயன்பாட்டிற்காக மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தது. இதனால் பூலாம்பட்டி பகுதி விவசாயிகள் முதல் போக கரும்பு சாகுபடியை வழக்கத்தை விட சற்று முன்னதாகவே நடப்பட்டு இருந்த நிலையில், தற்போது அவை அமோக விளைச்சல் கண்டு அறுவடைக்கு தயாராக உள்ளன.
வெளி மாநிலங்களுக்கு...
விரைவில் விஜயதசமி, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகள் வரவுள்ள நிலையில் பண்டிகை கால தேவைக்காக இங்கு உள்ள செங்கரும்புகள் அறுவடை செய்யும் பணி தொடங்கி உள்ளது. இந்த பகுதியில் விளையும் செங்கரும்புகள் 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.300 முதல் ரூ.350 வரை மொத்த கொள்முதல் செய்யப்பட்டு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு அதிக அளவில் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு செங்கரும்பு அமோக விளைச்சல் கண்டுள்ள நிலையில், அடுத்து வரும் 5 மாத காலங்களுக்கு கரும்பு அறுவடை பணி தொடரும் என இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.