மீன்களுக்கு உணவாக ஏாிகளில் கொட்டப்படும் சர்க்கரை ஆலை கழிவுகள்

மூங்கில்துறைப்பட்டு பகுதியில் மீன்களுக்கு உணவாக ஏாிகளில் சர்க்கரை ஆலை கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் அந்த மீன்களை வாங்கி சாப்பிடும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது.

Update: 2023-03-09 18:45 GMT

மூங்கில்துறைப்பட்டு, 

மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள சவேரியார்பாளையம், மைக்கேல்புரம், மேல்சிறுவள்ளூர், பொரசப்பட்டு, பாக்கம், புதூர், கடுவனூர், ராவத்தநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் உள்ள தண்ணீர் மூலம் அப்பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் குடிநீர் பிரச்சினையும் தீர்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பெரும்பாலான ஏரிகளில் மீன் வளர்க்க ஏலம் விடப்பட்டது. இதையடுத்து ஏலம் எடுத்தவர்கள் ஏரிகளில் மீன்குஞ்சுகளை தற்போது விட்டு வளர்த்து வருகின்றனர்.

இருப்பினும் மீன்களுக்கு தேவைான உணவை கடைகளில் வாங்கி ஏரிகளில் போட்டால் அதிக செலவு ஏற்படும் என கருதிய அவர்கள் மூங்கில்துறைப்பட்டில் உள்ள கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் பிரஸ்மெட் எனப்படும் கழிவுகளை அள்ளி கொண்டு வந்து அதனை மீன்களுக்கு உணவாக போடுகின்றனர்.

இந்த கழிவுகளை மீன்கள் தற்போது சாப்பிட்டு வருகிறது. இதனால் இந்த மீன்களை வாங்கி சாப்பிடும் பொது மக்களுக்கு பலவிதமான உடல் உபாதைகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

மேலும் ஏரி தண்ணீரில் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால், அந்த தண்ணீரை குடிக்கும் கால்நடைகளுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இது தவிர பல ஏரிகளில் குடிநீர் கிணறு உள்ளது. ஆலை கழிவுகளால் அந்த தண்ணீரும் மாசடைந்து வருவதால், அதனை பயன்படுத்தும் மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

தரமான மீன்கள்

இது குறித்து மூங்கில்துறைப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஏழுமலை கூறுகையில், ஏரிகளில் வளர்க்கப்படும் மீன்களுக்கு எந்த வகையான உணவுகள் கொடுக்கப்படுகின்றன என்பதை அதிகாரிகள் கண்காணிப்பதில்லை. இதனால் மீன்வளர்ப்பவர்கள் தனது சொந்த லாபத்துக்காக விதிமுறைகளை மீறி ஏரிகளில் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய சர்க்கரை ஆலை கழிவுகளை மீன்களுக்கு உணவாக கொட்டுகின்றனர்.

அதனை சாப்பிடும் மீன்களை வாங்கி பொதுமக்கள் சாப்பிடுவதால் அவர்களுக்கு பலவிதமான உடல் உபாதைகள் ஏற்படுகிறது. மேலும் குடிநீரும் மாசடைந்து வருவதால் அதனை பயன்படுத்த பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் அவர்கள் கடைகளில் குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஏழை எளிய மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இதை தவிர்க்க ஏரிகளில் ஆலை கழிவுகளை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தான் பொதுமக்களுக்கு தரமான மீன்கள் கிடைக்கும் என்றார்.

நடவடிக்கை இல்லை

மோட்டூரைச் சேர்ந்த பார்த்திபன் கூறுகையில், மூங்கில்துறைப்பட்டு பகுதியில் உள்ள ஏரிகள் விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களின் குடிநீரின் தேவைக்காகவும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஏரியில் விதிமுறைகளை மீறி சர்க்கரை ஆலை கழிவுகள் கொட்டப்படுகின்றன. இந்த ஆலை கழிவுகள் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகும். இதனால் அந்த ஆலை கழிவுகளை சாப்பிட்டு வளரும் மீன்களை பொதுமக்கள் வாங்கி சாப்பிடும்போது அவர்களுக்கு பலவிதமான உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலைமை கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. இது குறித்து பலமுறை புகார் அளித்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். பொதுமக்களுக்கு தரமான உணவு கிடைக்க செய்வது என்பது மாவட்ட நிர்வாகத்தின் கடமையாகும். எனவே ஏரிகளில் ஆலை கழிவுகளை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்