தைராய்டு பிரச்சினையால் அவதி: 2 பெண் குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை

தைராய்டு பிரச்சினையால் அவதியடைந்த 2 பெண் குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-07-27 18:49 GMT

தைராய்டு பிரச்சினை

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி அகிலா (வயது 29). இவர்களுக்கு தாரணி (10), லிகாஷினி (7) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பாபு பாடாலூரில் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வருகிறார். பாடாலூரில் தனியாா் பள்ளி ஒன்றில் தாரணி 5-ம் வகுப்பும், லிகாஷினி 4-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். அகிலா கடந்த 3 ஆண்டுகளாக தைராய்டு பிரச்சினையால் அவதிப்பட்டு, அதற்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

இதனால் மிகுந்த மனவேதனைக்கு ஆளான அகிலா கடந்த 25-ந்தேதி மாலை 5 மணியளவில் வீட்டில் தொட்டில் கட்டும் கம்பியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அகிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அகிலாவின் உடலை பார்த்து அவரது கணவரும், 2 குழந்தைகளும் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

பின்னர் மறுநாள் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடத்தில் இருந்து பிரேத பரிசோதனை முடிந்து அகிலாவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக அகிலாவின் தாயார் தஞ்சை மாவட்டம், பூதலூர் தாலுகா, வலப்பகுடி மெயின் ரோடு நடுபடுகையை சேர்ந்த கீதா பாடாலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அகிலாவின் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் இருக்கிறதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்