சோமரசம்பேட்டை:
சோமரசம்பேட்டை மாரியம்மன் கோவில் தோப்பை சேர்ந்தவர் பிச்சைக்கனி(வயது 47). ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் வழக்கம்போல் சவாரி சென்றுவிட்டு இரவில் ஆட்டோவை தனது வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்கச்சென்றார். நேற்று அதிகாலை 4 மணியளவில் அந்த ஆட்டோ திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு எழுந்த பிச்சைக்கனி, வெளியே ஓடிவந்து பார்த்தபோது ஆட்டோ கொழுந்து விட்டு எரிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். இருப்பினும் ஆட்டோ முற்றிலும் எரிந்து எலும்புக்கூடு போல் காட்சியளித்தது. மேலும் இது குறித்த புகாரின்பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில், பேட்டரி மூலம் ஆட்டோ தீப்பற்றி எரிந்திருக்கலாம், என்று தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.