சீனாபுரத்தில் பிணமாக கிடந்தவரின் சாவில் திடீர் திருப்பம் மதுபோதையில் தீர்த்துக்கட்டிய நண்பர்கள் 3 பேர் கைது பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் கொன்றதாக வாக்குமூலம்

சீனாபுரத்தில் பிணமாக கிடந்தவரின் சாவில் திடீர் திருப்பம்

Update: 2022-06-29 19:47 GMT

சீனாபுரம் மதுக்கடை அருகே பிணமாக கிடந்தவரின் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் தீர்த்துக்கட்டியதாக கைதான 3 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மதுகுடிக்கும் பழக்கம்

பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரம் தலையம்பாளையத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 42). இவருக்கு திருமணமாகி மகாலட்சுமி என்ற மனைவி உள்ளார். வேலுச்சாமிக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் குடும்ப தகராறில் மகாலட்சுமி அவரை விட்டு பிரிந்து கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நிச்சாம்பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதனால் வேலுச்சாமி தலையம்பாளையத்தில் உள்ள தனது தந்தை பொன்னுசாமி, தாய் பழனியம்மாளுடன் வசித்து வந்தார். மனைவி பிரிந்து சென்றதால் வேலுச்சாமி வழக்கத்தைவிட அதிகமாக குடிக்க ஆரம்பித்தார். மேலும் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இறந்து கிடந்தார்

அதேபோல் மது அருந்துவதற்காக கடந்த 23-ந் தேதி அன்று சீனாபுரம் மதுக்கடைக்கு சென்ற வேலுச்சாமி அதன் அருகில் இறந்து கிடந்தார். இதுபற்றி அறிந்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வேலுச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக பெருந்துறை போலீசில் வேலுச்சாமியின் அக்காள் வீரணம்பாளையத்தைச் சேர்ந்த சித்ரா (44) என்பவர் புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் 'எனது தம்பி வேலுச்சாமியின் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே இதுகுறித்து போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கொலை-3 பேர் கைது

இந்தநிலையில் மதுக்கடை அருகில் பிணமாக கிடந்த வேலுச்சாமி சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. போலீசாரின் புலன் விசாரணையில் வேலுச்சாமியை அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் 3 பேரும் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் பழனிக்கு விரைந்து சென்றனர். அப்போது மலை அடிவாரத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சீனாபுரம் ஊத்துப்பாளையத்தைச் சேர்ந்த வரதராஜன் (50), திங்களூர் புளியம்பட்டியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (36), சீனாபுரம் சூரநாய்க்கனூரைச் சேர்ந்த மெரூன் (23) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்கள் 3 பேரும் வேலுச்சாமியை தீர்த்துக்கட்டியதாக போலீசாரிடம் தெரிவித்தனர். இந்த கொலை தொடர்பாக 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

வாக்குமூலம்

இதுகுறித்து 3 பேரும் போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

வேலுச்சாமி சீனாபுரம் மதுக்கடைக்கு மது அருந்த வருவார். அதேபோல் நாங்கள் 3 பேரும் அங்கு சென்று மது அருந்துவோம். அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இதன் மூலம் வேலுச்சாமி நண்பர் ஆனார். இதைத்தொடர்ந்து நாங்கள் 4 பேரும் ஒன்றாக சேர்ந்து மது குடித்து வந்தோம். அதேபோல் சம்பவத்தன்று 4 பேரும் சீனாபுரம் மதுக்கடைக்கு சென்று மது குடித்தோம். பின்னர் மது போதையில் 4 பேரும் கடையை விட்டு் வெளியே வந்தோம்.

அப்போது பணம் கொடுக்கல்-வாங்கல் சம்பந்தமாக வேலுச்சாமிக்கும், எங்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி எங்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நாங்கள் அருகே கிடந்த கல்லை எடுத்து வேலுச்சாமியின் தலையில் ஓங்கி அடித்ேதாம். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் அலறியபடி கீழே சாய்ந்தார். சிறிது நேரத்தில் வேலுச்சாமி இறந்துவிட்டார். கொலை நடந்ததும் நாங்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பித்து சென்று பழனியில் தலைமறைவாக இருந்து வந்தோம். இந்த நிலையில் போலீசார் துப்பு துலக்கி விசாரணை நடத்தியதில் எங்களை கண்டு்பிடித்து கைது செய்துவிட்டனர்.

இவ்வாறு 3 பேரும் அந்த வாக்குமூலத்தில் கூறி உள்ளனர்.

சிறையில் அடைப்பு

கைதான 3 பேரும் பெருந்துறை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சபினா, கைது செய்யப்பட்ட 3 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்