மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் இறந்த வழக்கில் திடீர் திருப்பம்

குன்னம் அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் இறந்த வழக்கில் திடீர் திருப்பமாக வேலைக்கு அழைத்துச்சென்றவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2023-09-21 18:16 GMT

பலி

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள புதுவேட்டக்குடி மெயின் ரோட்டை சோ்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சின்னதுரை (வயது 29). எலக்ட்ரீசியனான சின்னதுரை கடந்த 18-ந் தேதி வரிசைபட்டி கிராமத்தில் ஒருவரின் வீட்டிற்கு எலக்ட்ரீசியன் வேலைக்கு சென்றிருந்தார். மாலை நேரத்தில், அந்த வீட்டின் அருகே உள்ள மின் கம்பத்தில் ஏறிய சின்னதுரை மீது தவறுதலாக மின்சார கம்பி அவரது உடலில் பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து சின்னதுரை சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த சின்னதுரையின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் உரிமையாளரை கைது செய்யக்கோரியும், அவரிடம் இருந்து இழப்பீடு பெற்று தரக்கோரியும் வரிசைபட்டி பிரிவு சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைது

மேலும் இச்சம்பவம் குறித்து மங்களமேடு சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சீராளன், குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று குன்னம் போலீசார் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சின்னதுரையை அந்த வீட்டிற்கு மின்சார பழுது நீக்கும் பணிக்காக அழைத்துச் சென்ற வரிசைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் முருகேசன்(45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த வீட்டிற்கு பழுது நீக்கும் பணிக்காக அழைத்துச் சென்றது தெரியவந்தது. மேலும் மின்சார கம்பத்தில் ஏறினால் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் உள்ளது என்பதை அறிந்து சின்னதுரையை அந்த பணியில் அவரை அமர்த்தியதற்காக முருகேசன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெரம்பலூர் சிறையில் அடைத்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்