நீதிபதியிடம் மாணவி புகாரால் திடீர் திருப்பம்: கல்லூரியில் ஆசிரியைகள் உள்பட 15 பேருக்கு பாலியல் தொல்லை; பேராசிரியர் கைது -மாணவரும் சிக்கினார்-2 பேராசிரியர்களுக்கு வலைவீச்சு
கல்லூரியில் மாணவிகள், ஆசிரியைகள் உள்பட 15 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் கொடுத்ததில் பேராசிரியர் கைது செய்யப்பட்டார். இதில் மாணவர் ஒருவரும் சிக்கினார். மேலும் 2 பேராசிரியர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
செக்கானூரணி
கல்லூரியில் மாணவிகள், ஆசிரியைகள் உள்பட 15 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் கொடுத்ததில் பேராசிரியர் கைது செய்யப்பட்டார். இதில் மாணவர் ஒருவரும் சிக்கினார். மேலும் 2 பேராசிரியர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
போலீசில் புகார்
மதுரை அருகே உள்ள ஒரு கல்லூரியில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் முதல் ஆண்டில் படித்து வருகிறார்.
அந்த மாணவிக்கு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் ஜெகன் கருப்பையா (வயது 42) பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த மாணவி, முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, தேசிய மகளிர் ஆணையம், மாநில மகளிர் ஆணையம் ஆகியவற்றில் புகார் செய்தார். மேலும் மதுரை மகிளா கோர்ட்டில் நீதிபதியிடம் புகார் அளித்தார். இந்த புகாரை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் செக்கானூரணி இன்ஸ்பெக்டர் சிவசக்தி மற்றும் போலீசார் கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
மாணவர்-பேராசிரியர் கைது
அப்போது அங்கு பணிபுரியும் 3 பேராசிரியைகள், மாணவிகள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் தாமாக முன்வந்து பாலியல் தொல்லை தொடர்பாக ஜெகன் கருப்பையா உள்பட சில பேராசிரியர்கள் மீது போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். அப்போது மாணவர் ஒருவர் மீதும் புகார் தெரிவித்தனர்.
இந்த புகார் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், பேராசிரியர் ஜெகன் கருப்பையா மற்றும் மாணவரை கைது செய்தனர். மேலும் இந்த விவகாரத்தில் பேராசிரியர்கள் ஞானசேகர், ஸ்டாலின் ஆகியோரை போலீசார் ேதடி வருகின்றனர்.
பரபரப்பு
பாலியல் சம்பவம் தொடர்பாக பேராசிரியைகள், மாணவிகள் கொடுத்த புகாரின் பேரில் மேலும் சிலரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கல்லூரியில் ஆசிரியைகள், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் மீது நடவடிக்கை பாய்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.