நெல்லையில் திடீர் மழை

நெல்லையில் நேற்று திடீர் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

Update: 2022-08-18 20:26 GMT

நெல்லையில் நேற்று திடீர் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

திடீர் மழை

நெல்லையில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வந்ததால் அணைகளின் நீர்மட்டம் மளமளவென்று உயர்ந்தது. நெல்லை பகுதிகளும் இதமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக வெயில் சுட்டு எரித்தது. கோடை காலம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்றும் பகலில் வெயில் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இந்த நிலையில் மாலை 4.30 மணி அளவில் மேகங்கள் ஒன்று கூடி இடி-மின்னலுடன் திடீர் மழை பெய்தது. இந்த மழை ½ மணி நேரம் இடைவிடாமல் பெய்தது. தொடர்ந்து லேசாக மழை தூறிக் கொண்டே இருந்தது.

குளம்போல் தேங்கிய தண்ணீர்

மாலை பள்ளிக்கூடம் முடிவடைந்து மாணவ-மாணவிகள் வீட்டுக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்த நேரத்தில் மழை பெய்ததால் அவர்கள் கடும் சிரமப்பட்டனர். பள்ளிகளில் இருந்து பஸ் நிறுத்தத்துக்கும், வீடுகளுக்கும் நடந்த சென்ற மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். ஆட்டோக்களில் பக்கவாட்டில் தார்பாய்களை கொண்டு மூடியவாறு மாணவ-மாணவிகள் அழைத்து செல்லப்பட்டனர்.

பலத்த மழையால் நகரில் உள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. நெல்லை டவுன் சேரன்மாதேவி ரோட்டில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. இதேபோல் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தின் வடக்கு பகுதி மற்றும் மதுரை ரோட்டிலும் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. நகரில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்க பள்ளங்கள் தோண்டப்பட்ட பகுதிகளில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு சென்றனர். இதனால் சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம், முருகன்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்