விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் மறியல்
செஞ்சி அருகே பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் மறியல்;
செஞ்சி
செஞ்சியை அடுத்த நெகனூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் இரு தரப்பு மாணவர்களிடையே பிரச்சினை இருந்து வந்தது. இதையடுத்து நெகனூர் கிராமத்தை சேர்ந்த பிரமுகர்கள் சிலர் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று ஒரு தரப்பு மாணவர்களை தாக்கியதாகவும், இதில் 4 மாணவர்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களில் ஆதிராவிட மாணவர்கள் 2 பேர் செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து மாணவர்கள் கொடுத்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தாங்கள் கொடுத்த புகார் மீது சரியான முறையில் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று பாதிக்கப்பட்ட ஆதிதிராவிட மாணவர்களின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் தெரிவித்ததை அடுத்து அவர்களை விசாரணைக்காக நேற்று மாலை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அதன் பேரில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் அம்பேத்கர் கட்சியினர், மாணவர்களின் உறவினர்கள் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மாலையில் வந்தனர். ஆனால் சுமார் 1½ மணி நேரம் ஆகியும் வெளியே சென்று இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு திரும்பி வராததால் ஆத்திரம் அடைந்த அவர்கள் செஞ்சி-திருவண்ணாமலை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியலை கைவிட்ட அவர்கள் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரிலே நின்று கொண்டிருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.