தாம்பரம் தாலுகா அலுவலகத்தில் திடீர் ஆய்வு பொதுமக்களை அலைக்கழிக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை

தாம்பரம் தாலுகா அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், பொதுமக்களை அலைக்கழிக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.;

Update:2022-05-28 15:23 IST

சென்னையை அடுத்த தாம்பரம் தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன் நேற்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு காத்திருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அதன்பிறகு தாலுகா அலுவலகத்தில் உள்ள கோப்புகளை ஆய்வு செய்தார். அதில் ஏராளமான கோப்புகள் முடித்து வைக்கப்படாமல் நிலுவையில் வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பொதுமக்கள் புகார் தெரிவித்த அதிகாரிகளை நேரில் அழைத்து எச்சரித்த அமைச்சர், தாம்பரம் தாசில்தார் பாலாஜியையும் கடுமையாக எச்சரித்தார். "உங்களின் செயலுக்கு பணி நீக்கம்தான் செய்யவேண்டும். ஆனால் உங்களின் குடும்ப நலனை கருதி எச்சரிக்கிறோம். பணிகளை முறையாக செய்யவேண்டும்" என கேட்டுகொண்டார்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 25-ந் தேதி கிண்டி தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மக்களிடமிருந்து வரப்பெறும் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு, தாமதம் தவிர்க்கும் வண்ணம் செயல்பட அறிவுரை வழங்கினார். அதன் அடிப்படையில் தாம்பரத்திலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள், ஏழைகள் அலைக்கழிக்கப்படக்கூடாது என முதல்-அமைச்சர் கூறி உள்ளார். அதனை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். நில அளவையர்கள் பணியிடம் தற்போது 50 சதவீதம் காலியாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு வி.ஏ.ஓ.க்கும் சர்வே செய்யும் பயிற்சி அளிக்கப்படுகிறது, அதனால் 6 மாதத்தில் அவர்களும் பணியாற்ற முடியும்.

தாம்பரம் தாலுகா அலுவலகத்தில் ஏராளமான குறைகள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு மாதத்தில் மீண்டும் ஆய்வுக்கு வரும்போது இந்த குறைகள் நிவர்த்தி செய்யப்படாமல் அப்படியே இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை பாயும்.

பொதுவாக அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகள் நடந்துகொள்ளக்கூடாது. அரசுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்காமல் இருந்தால் அவர்கள் மீதும், பொதுமக்களை அலைக்கழிக்கும் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

அப்போது தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா மற்றும் வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்