ரேஷன் கடையில் திடீர் தீ; 1,200 கிலோ அரிசி எரிந்து நாசம்

ரேஷன் கடையில் திடீர் தீ; 1,200 கிலோ அரிசி எரிந்து நாசமானது.;

Update:2023-10-25 00:20 IST

ரேஷன் கடை

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அண்ணா நகரில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் 475-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடையின் விற்பனையாளர் தொல்காப்பியன் கடந்த 22-ந் தேதி மாலை விற்பனை முடிந்த பின்னர், வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றார்.

நேற்று முன்தினம் ஆயுத பூஜைக்காக கடையை திறந்து பார்த்தபோது, ரூ.40 ஆயிரம் மதிப்பிலான தலா 50 கிலோ எடை கொண்ட 23 மூட்டைகளில் இருந்த 1,200 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 500-க்கும் மேற்பட்ட சாக்குகள் எரிந்து நாசமாகி கிடந்தது.

பட்டாசு வெடித்தபோது...

இது குறித்து கடை விற்பனையாளர் தொல்காப்பியன் கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீசார் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். குன்னம் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணையில், அப்பகுதியில் சிறுவர்கள் பட்டாசு வெடித்தபோது, கடையின் ஜன்னல் வழியாக தீப்பொறி விழுந்து ரேஷன் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

==============

Tags:    

மேலும் செய்திகள்