டிரான்ஸ்பார்மர் அருகே குப்பையில் திடீர் தீ
டிரான்ஸ்பார்மர் அருகே குப்பையில் தீப்பற்றியது.
பனமரத்துப்பட்டி:-
ஆட்டையாம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் பல ஆண்டுகளாக பஸ் நிலையம் பின்புறம் உள்ள கரட்டில் கொட்டப்பட்டு வருகிறது. இப்பகுதியில் டன் கணக்கில் சேர்ந்த குப்பையால் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி சமூக விரோதிகள் சிலர் அடிக்கடி குப்பையை தீ வைத்து வருகின்றனர். இதன் காரணமாக இங்குள்ள குப்பையை பிளாஸ்டிக், கல், மணல் என தனித்தனியாக பிரித்தெடுத்து அகற்றும் பொருட்டு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் இப்பகுதியில் டிரான்ஸ்பார்மர் அருகே உள்ள குப்பை திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை கவனித்த அருகே உள்ள கடைக்காரர்கள் ஆட்டையாம்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து தீயை அணைத்தனர்.
டிரான்ஸ்பார்மர் அருகே குப்பையில் தீப்பற்றி எரிந்த நிலையில் உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அடிக்கடி குப்பைகளில் தீவைக்கும் நபர்கள் பற்றி பேரூராட்சி ஊழியர்கள் விசாரித்து வருகின்றனர். இந்த பாதையில் டாஸ்மாக் கடை உள்ளதால் மதுப்பிரியர்கள் சிகரெட் பிடித்து விட்டு தூக்கி எறிந்து சென்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.