"கலைத்துறையில் வாரிசு - அரசியலில் கூடாதா?" - ஆர்.எஸ்.பாரதி பேச்சு

கலைத்துறையில் வாரிசுகள் வருவது போல், அரசியலில் வாரிசுகள் வருவதில் என்ன தவறு? என்று ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பினார்.

Update: 2022-12-13 17:03 GMT

கோப்புப்படம்

சென்னை,

கடந்த ஆண்டு (2021) நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்று முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார். கட்சியிலும் தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் உள்ளார்.

இந்தநிலையில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்தார். இதனை கவர்னர் ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு கிண்டி கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. இதில் கவர்னர் ஆர்.என்.ரவி, உதயநிதி ஸ்டாலினுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

இந்நிலையில் கலைத்துறையில் வாரிசுகள் வருவது போல், அரசியலில் வாரிசுகள் வருவதில் என்ன தவறு? என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக சென்னை தி.நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "தமிழ்நாட்டில் ஒரு செங்கல்லை வைத்து கோட்டையை தகர்த்துக் காட்டியவர் உதயநிதி ஸ்டாலின். கலைத்துறையில் வாரிசுகள் வருவது போல், அரசியலில் வாரிசுகள் வருவதில் என்ன தவறு?. உதயநிதி அரசியலில் கால் வைத்த நாள் முதல் வெற்றியை மட்டுமே தேடித் தந்துள்ளார். நாளை அமைச்சராக பதவி ஏற்கும் உதயநிதிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்