மானிய விலையில் வாழைத்தார் உறைகள்- தோட்டக்கலை உதவி இயக்குனர் தகவல்

வாடிப்பட்டி பகுதியில் வாழைத்தார் உறைகள் வாங்க மானியம் வழங்கப்படுவதாக தோட்டக்கலை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.;

Update: 2023-09-05 00:48 GMT

வாடிப்பட்டி

வாடிப்பட்டி பகுதியில் வாழைத்தார் உறைகள் வாங்க மானியம் வழங்கப்படுவதாக தோட்டக்கலை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மானியம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வேளாண்மை கோட்ட தோட்டக் கலை உதவி இயக்குனர் தாமரைச் செல்வி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் தோட்டக்கலை துறையின் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் வாழைத்தார் உறைகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. வாழை உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் இருந்தாலும் 0.4 சதவீத ஏற்றுமதி செய்கிறோம். ஏற்றுமதியை ஊக்குவிக்க தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தில் வாழைத்தார் உறைகள் ஏக்கருக்கு ரூ.12,500 மானியம் வழங்கப்படுகிறது. இந்த ஏற்றுமதி தரத்தை அதிகரிக்க மரத்தில் கடைசி சீப் காய்கள் வெளிவந்தவுடன் 0.5 மில்லி மீட்டர் தடிமன் கொண்ட மற்றும் காற்றோட்டத்தை உருவாக்க தேவையான 4 சதவீத ஓட்டைகளை கொண்ட நீலம் அல்லது வெள்ளை நிற பாலித்தீன் பை கொண்டு மூட வேண்டும்.

நோய்களை கட்டுப்படுத்தலாம்

இதனால் காய்கள் வேகமாக முதிர்ச்சி அடைவதுடன் அளவு மற்றும் நிறத்தில் சமச்சீர் உடையதாகவும் பூச்சி மற்றும் நோய்கள் ஏற்படுத்தக்கூடிய அறிகுறிகள், காய்களில் இல்லாமலும் இருக்கும். இம்மாதிரியான முறையினால் வாழைக்காய்களுக்கு எந்த விதமான சேதங்களும் எளிதில் ஏற்படுவதில்லை. வாழைத்தார்களுக்கு மரத்தில் இருக்கும்போது சூடோமோனாஸ், பேசில்லஸ், சப்டிலிஸ் போன்ற உயிர்எதிர்ப்பு பாக்டீரியாக்களை தெளிப்பதால், அறுவடைக்குப்பின் வரக்கூடிய நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் வாழை விவசாயிகள் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் உதவி தோட்டக்கலை அலுவலரை 96004 56101 தொடர்பு கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்