சமூக ஆர்வலரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்

நாகூர் அருகே வாஞ்சூர் சோதனை சாவடியில் சமூக ஆர்வலரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் நடவடிக்கை மேற்கொண்டார்.;

Update: 2023-04-24 18:45 GMT

நாகூர்:

நாகூர் அருகே வாஞ்சூர் சோதனை சாவடியில் சமூக ஆர்வலரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் நடவடிக்கை மேற்கொண்டார்.

சாராய கடத்தல்

நாகையை அடுத்த நாகூர் மேலவாஞ்சூர் ரவுண்டானாவில் மோட்டார் சைக்கிளில் சாராய கடத்தலை தடுக்கும் வகையில், திட்டச்சேரி சாலையில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரவுண்டானாவில் இருந்து பிரியும் 4 சாலைகளில் 2 சாலைகள் இரவு நேரங்களில் ஒருவழி பாதையாக தடுப்புகள் அமைக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அரசு பஸ் மற்றும் மற்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை அந்த வளைவில் திருப்ப முடியாமல் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் தடுப்புகள் அடைக்கப்பட்டு இருந்ததால் கும்பகோணத்தில் இருந்து நாகைக்கு வந்த அரசு பஸ்கள் பயணிகளுடன் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

போலீசாரிடம் வாக்குவாதம்

இதனையடுத்து அவ்வழியாக சென்ற உள்ளூர் சமூக ஆர்வலர்கள் சிலர் தடுப்புகளை அகற்றி அரசு பஸ் செல்ல வழிவகை செய்ய வேண்டுமென அங்கிருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு தடுப்புகள் அகற்றப்பட்டு பஸ்கள் செல்ல வழிவகை செய்யப்பட்டது.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பழனிவேல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் ஒருவவரை கடுமையாக தாக்கி ஒருமையில் பேசியதோடு, போலீஸ் வாகனத்தில் ஏற்றி தனது பூட்ஸ் காலால் எட்டி உதைத்துள்ளார்.

ஆயுதப்படைக்கு மாற்றம்

அரசு பஸ் எளிமையாக செல்வதற்கு தடுப்புகளை அகற்ற வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலரை சப்-இன்ஸ்பெக்டர் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

இதை தொடர்ந்து நாகப்பட்டினம் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், சமூகஆர்வலரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேலை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

3 பேர் மீது வழக்கு

மேலும் இந்த வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக நாகூர் பெருமாள் நாடார் தோட்டத்தை சேர்ந்த ரூபன்ராஜ் மகன் ஆரோக்கியதாஸ், நாகூர் பட்டினச்சேரி நடராஜன் மகன் அசோக், நாகூர் வண்ணாகுளம் மேல்கரை தெருவை சேர்ந்த சின்னையன் மகன் சரவணன் ஆகிய 3 பேர் மீது நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்