மாணவ-மாணவிகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்

போதை பழக்கத்துக்கு அடிமையாகுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிப்பதால் மாணவ-மாணவிகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் கூறினார்.

Update: 2022-11-09 20:59 GMT

திருவட்டார், 

போதை பழக்கத்துக்கு அடிமையாகுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிப்பதால் மாணவ-மாணவிகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் கூறினார்.

மக்கள் தொடர்பு முகாம்

குமரி மாவட்ட வருவாய் துறை சார்பில் குமரன்குடி ஊராட்சிக்கு உட்பட்ட முதலாறு அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் பங்கேற்று பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர் தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அந்த வகையில் மொத்தம் 32 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பின்னர் அவர் பேசியபோது கூறியதாவது:-

மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு துறைகள் சார்பில் அரசால் வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டு உள்ளது. அவற்றை பொதுமக்கள் புரிந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் பெற்று பயன் அடைய வேண்டும்.

கழிவுநீர் உறிஞ்சுக்குழி

ஒவ்வொரு வீடுகளிலும் கழிவுநீர் உறிஞ்சுக்குழி அமைக்க அனைவரும் முன்வர வேண்டும். இந்த உறிஞ்சுக்குழி அமைப்பதற்கு ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான செலவே ஆகும்.

பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க பனை ஓலைகளால் உருவாக்கப்பட்ட கூடைகள், தாமரை இலை உள்ளிட்ட இயற்கையான பொருட்களை பயன்படுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும்.

தற்போதைய சூழலில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் போதைப் பொருட்களுக்கு அடிமையாகுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. போதைப் பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்காக போலீசார், சமூகநலத்துறை, தன்னார்வலர்கள் மூலம் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

பெற்றோர் கண்காணிக்க வேண்டும்

6-ம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளை பெற்றோர் முற்றிலுமாக கண்காணிக்க வேண்டும். குழந்தைகளிடம் பெற்றோர் பேச வேண்டும். அவ்வாறு பேசும்போது அவர்களின் பிரச்சினைகளை தெரிந்து கொண்டு, வாழ்வில் உயர்நிலையை எட்ட முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் பத்மநாபபுரம் உதவி கலெக்டர் கவுசிக், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ், தனித்துணை கலெக்டர் திருப்பதி, இணை இயக்குனர் (வேளாண்மை) ஹனி ஜாய் சுஜாதா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஷீலா ஜாண், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வாணி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் நாகராஜன், வேலைவாய்ப்பு அலுவலர் ஜெரிபா இம்மானுவேல், மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமாரி, குமரன்குடி ஊராட்சி தலைவர் பால்சன், மாவட்ட கவுன்சிலர் செலின் மேரி, வேர்க்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜித் ஜெபகுமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் விமலா ராணி, ஆதிதிராவிடர்துறை தனி தாசில்தார் கோலப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்