மதிய உணவு கிடைக்காமல் பரிதவித்த மாணவ-மாணவிகள்

கலவராயன்மலை அரசு மலைவாழ் உண்டு உறைவிட பள்ளியில் மதிய உணவு கிடைக்காமல் மாணவ-மாணவிகள் பரிதவித்தனர். இதை அறிந்து வந்த பெற்றோர் சமையலர்களிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது;

Update: 2022-08-22 18:29 GMT

கச்சிராயப்பாளையம்

உண்டு உறைவிட பள்ளி

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் கிளாக்காடு கிராமத்தில் அரசு மலைவாழ் உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு கிளாக்காடு மட்டுமின்றி வேங்கோடு, கூடாரம், வில்வெற்றி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 250 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று 2 பெண் சமையலர்கள் மற்றும் ஒரு மாணவி ஆகிய 3 பேரும் மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கிக்கொண்டிருந்தனர். ஆனால் சில நிமிடங்களிலேயே உணவு காலியாகி விட்டது. குறைந்த அளவிலேயே உணவு தயார் செய்யப்பட்டதால் 100 மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு கிடைக்காமல் பசியோடு தவித்தனர்.

பெற்றோர் விரைந்து வந்தனர்

உணவு தீர்ந்து விட்டதை சக மாணவ-மாணவிகளுக்கு தெரிவிக்கும் வகையில் அவர்கள் தங்கள் கையில் இருந்த காலி பாத்திரங்களை தூக்கி காண்பித்தது பரிதாபமாக இருந்தது. மேலும் இதுகுறித்து சில மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் பள்ளிக்கு விரைந்து வந்து அங்கிருந்த சமையலர்களிடம் ஏன் குறைந்த அளவில் உணவு சமைத்து மாணவ-மாணவிகளுக்கு பரிமாறுகிறீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஆசிரியர்கள் சமாதானம் செய்தனர்.

பின்னர் மீண்டும் உணவு சமைத்து மாலை 4 மணியளவில் மீதமுள்ள மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

ஆய்வுசெய்ய வேண்டும்

இது பற்றி பெற்றோர்கள் கூறும்போது, இந்த பள்ளியில் மதிய உணவு சரியான முறையில் வழங்குவதில்லை. குறைந்த அளவில் உணவு தயார் செய்து மிகவும் தாமதமாக வழங்குகிறார்கள். இதில் முறைகேடுகள் நடைபெறுவதாக தெரிகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்