மதுபோதையில் மாணவர்கள் ரகளை: இளைய தலைமுறையை சீரழிக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Update: 2023-11-30 11:08 GMT

சென்னை,

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டம் பேரங்கியூரில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் 4 பேர் நேற்று மதுபோதையில் பள்ளிக்கு வந்து, வகுப்பறைகளில் பாடம் நடத்திக் கொண்டிருந்த தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களை தகாத சொற்களால் திட்டியும், பாடம் நடத்த விடாமல் தடுத்தும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிக்குள் கற்களை வீசியும், நுழைவாயிலை சேதப்படுத்தியும் அவர்கள் வன்முறை செய்ததாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன.

மாணவர்கள்தான் நாட்டின் வருங்கால மன்னர்கள். அவர்களை நம்பித்தான் அவர்களின் குடும்பங்களும், சமுதாயமும், நாடும் உள்ளது. ஆனால், அவர்கள் எந்தப் பொறுப்பும் இல்லாமல் மது அருந்தி விட்டு, தங்களுக்கு கல்வி வழங்கும் கோயிலான பள்ளிக்கூடத்தில் வன்முறையில் ஈடுபட்டிருப்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. மது நாட்டையும், வீட்டையும் மட்டுமின்றி இளைய சமுதாயத்தையும் எந்த அளவுக்கு சீரழிக்கும் என்பதற்கு இதுவே சான்று ஆகும்.

மாணவர்கள் மதுவுக்கு அடிமையாவதற்கு அவர்களை மட்டுமே குறை கூறி விட முடியாது. கைக்கெட்டும் தொலைவில் மது கிடைப்பதுதான் இந்த சீரழிவுக்கு காரணம் ஆகும். பேரங்கியூரில் பள்ளிக்கூடத்திற்கு மிக அருகிலேயே மதுக்கடை செயல்பட்டு வருவதுதான் அந்த பள்ளி மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகி ரகளையில் ஈடுபட்டதற்கு காரணம் ஆகும். மாணவர்களைக் கெடுக்கும் மதுக்கடையை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல முறை வலியுறுத்தியும் சர்ச்சைக்குரிய மதுக்கடை மூடப்படவில்லை; அண்மையில் தமிழ்நாடு முழுவதும் 500 மதுக்கடைகள் மூடப்பட்ட போதும் கூட அந்த மதுக்கடை அகற்றப்படவில்லை.

தமிழ்நாட்டில் தெருவுக்குத் தெரு அமைக்கப்பட்டுள்ள மதுக்கடைகள் அனைத்து தரப்பு மக்களையும் சீரழிப்பதற்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சான்றுகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. அவை தமிழகத்தை எத்தகைய பேரழிவுக்கு அழைத்துச் செல்லும் என்பது அரசுக்கு தெரியாததல்ல. எனவே, இனியும் அலட்சியம் காட்டாமல் தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்