மாணவர்கள் ஆற்றலை வளர்த்து கொள்ள புத்தகம் படிக்கிற பழக்கம் இருக்க வேண்டும்
மாணவர்கள் ஆற்றலை வளர்த்து கொள்ள வேண்டுமென்றால் புத்தகம் படிக்கிற பழக்கம் இருக்க வேண்டும் என்று திருவண்ணாமலையில் புத்தக திருவிழா தொடக்க விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.;
மாணவர்கள் ஆற்றலை வளர்த்து கொள்ள வேண்டுமென்றால் புத்தகம் படிக்கிற பழக்கம் இருக்க வேண்டும் என்று திருவண்ணாமலையில் புத்தக திருவிழா தொடக்க விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
மாபெரும் புத்தக திருவிழா
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், பொதுநூலக இயக்கம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் புத்தக திருவிழா திருவண்ணாமலை பழைய பைபாஸ் சாலையில் உள்ள காந்தி நகர் மைதானத்தில் இன்று தொடங்கியது.
இந்த புத்தக திருவிழா வருகிற 19-ந் தேதி (புதன்கிழமை) வரை நடைபெற உள்ளது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது.
இதில் 100 புத்தகக்கடைகளுடன் கூடிய புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.
விழாவினை முன்னிட்டு நாள்தோறும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர், பேச்சாளர், சிந்தனையாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெறவுள்ளன.
மேலும் இங்கு குழந்தைகளுக்கான விளையாட்டுகள், உணவுக்கூடங்கள், அரசு துறை அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.
தொடக்க விழாவுக்கு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.
துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தஞ்சாவூர் சரஸ்வதி மகால்
இதில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு புத்தகத் திருவிழாவினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க திருவண்ணாமலை மாவட்டத்தில் புத்தக திருவிழா நடைபெறுகிறது. இந்தியாவினுடைய பொருளாதாரத்தையும், மாநில பொருளாதாரத்தையும், வீட்டு பொருளாதாரத்தையும் ஈட்ட வேண்டும் என்றால் வேலை வாய்ப்பு தேவை. அதற்கு நீங்கள் படிக்க வேண்டும்.
கற்பதினால் தான் பொது அறிவை வளர்த்து கொள்ள முடியும், நல்ல வேலைவாய்ப்பை பெற முடியும். படிப்பு தான் நமது வாழ்க்கையில் உதவிகரமாகவும், உந்து சக்தியாகவும் அமைகிறது. தமிழ்நாட்டில் 1974-ம் ஆண்டு முதன்முதலாக சென்னை தலைநகரில் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டது.
தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மகால் உள்ள நூலகம் இன்றைக்கு நமக்கு பெருமை சேர்த்து கொண்டிருக்கின்றது. 1531-ம் ஆண்டு மன்னர்களால் உருவாக்கப்பட்ட சரஸ்வதி மகால் இன்றைக்கு சீரும், சிறப்புமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
மாணவர்கள் ஆற்றலை வளர்த்து கொள்ள வேண்டும் என்றால் புத்தகம் படிக்கின்ற பழக்கம் இருக்க வேண்டும். நிறைய புத்தகங்களை படிப்பதன் மூலமாக அறிவு திறனை மேலும் வளர்த்து கொள்ள முடியும்.
தமிழ்நாட்டில் மாவட்ட மத்திய நூலகங்கள், கிளை நூலகங்கள், நடமாடும் நூலகங்கள், பகுதி நேர நூலகங்கள், ஊரக பகுதி நூலகங்கள் என 4636 நூலகங்கள் உள்ளன.
சிறைச் சாலையில் நூலகம்
தமிழக முதல்-அமைச்சர் பொறுப்பேற்றவுடன் தன்னை சந்திக்க வருபவர்களிடம் பொன்னாடை, மாலைகள் தவிர்த்து புத்தகங்களை வழங்குமாறும், அந்த புத்தகங்களை பிற நூலகங்களுக்கு வழங்கி பலரை அறிவு புரட்சியில் உருவாக்க பயனாகயிருக்கும் என அறிவுறுத்தினார்.
மேலும் சிறையில் உள்ள குற்றவாளிகள் திருந்த வேண்டும், சீர்திருத்தமாக வேண்டும்,
அறிவு பெற்ற மனிதராக வர வேண்டும் என்றால் சிறையில் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று ஒவ்வொரு சிறைச் சாலையிலும் ஒரு நூலகத்தை உருவாக்கி சிறை கைதிகளுக்கு புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டு உள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
அடையாள அட்டை
தொடர்ந்து நூலக நண்பர்கள் திட்டத்தின் மூலம் திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தின் தன்னார்வலர்களுக்கு நூல்கள், புத்தகப்பை மற்றும் அடையாள அட்டையை அமைச்சர் வழங்கினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியாதர்ஷினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர் பிரதாப்சிங், மாநில தடகள சங்க துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் எம்.எஸ்.தரணிவேந்தன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன்,
நகரமன்றத் தலைவர் நிர்மலா வேல்மாறன், ஒன்றியக்குழு தலைவர்கள் கலைவாணி கலைமணி, பரிமளா கலையரசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெற்றிவேல், திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் முருகேசன், தி.மு.க. நிர்வாகிகள் இரா.ஸ்ரீதரன், பன்னீர்செல்வம், கார்த்திவேல்மாறன், துரை வெங்கட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.