மாணவர்கள் தங்களின் தனித்திறமைகளை வெளியே கொண்டு வர வேண்டும்

கலைத்திருவிழா, விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய தனித்திறமையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசினார்.;

Update: 2022-12-08 14:36 GMT

காட்பாடி

கலைத்திருவிழா, விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய தனித்திறமையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசினார்.

கலைத்திருவிழா

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கலைத்திருவிழா போட்டிகள் பள்ளி மற்றும் வட்டார அளவில் நடந்து முடிந்தது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடந்தது.

கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது:-

மாணவர்கள் படிப்புடன் நின்று விடக்கூடாது. கலை விழாக்கள், விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு தங்களுடைய தனித்திறமைகளை வெளிக்கொண்டு வரவேண்டும்.

சேவை செய்ய வேண்டும்

நீங்கள் சமுதாயத்திற்கு சேவை செய்ய வேண்டும்.

தமிழக முதல்-அமைச்சரின் எண்ணத்தில் உதித்தது தான் இந்த கலைத் திருவிழா போட்டிகள்.

அதில் நீங்கள் எல்லாம் ஒரு கருவி. நீங்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சி அடைகிறேன். மாணவர்கள் செம்மையான தமிழ் சமுதாயத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

4,500 மாணவ-மாணவிகள்

மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டியில் கவின்கலை, நுண்கலை, மொழித்திறன், நாடகம், இசை, வாய்ப்பாட்டு, தோல்கருவி காற்று கருவி, தந்தி கருவிகள், இசை சங்கமம், நடனம் உள்பட 15 வகையான தலைப்புகளில் 83 வகையான போட்டிகள் நடந்தன. இந்த போட்டிகள் நேற்றும் வருகிற 12-ம் தேதியும் என 2 நாட்கள் நடக்கிறது. போட்டியில் வேலூர் மாவட்டத்தில் இருந்து 4,500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா வருகிற 12-ந் தேதி மாலை 4 மணிக்கு காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.

இதில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்குகிறார்.

மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு பங்கேற்க தகுதி பெறுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் காட்பாடி ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) தயாளன், உதவி திட்ட அலுவலர் மகாலிங்கம், தாசில்தார் ஜெகதீஸ்வரன், தலைமை ஆசிரியர்கள் ஜோதீஸ்வர பிள்ளை, திருநாவுக்கரசு, சிவவடிவு, பழனி, சண்முகம் ஆசிரியர்கள் க.ராஜா, சச்சிதானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட கல்வி அலுவலர் முனுசாமி வரவேற்றார். முடிவில் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) அங்குலட்சுமி நன்றி கூறினார்.

விழாவை ஆசிரியர்கள் செ.நா. ஜனார்த்தனன், தமிழ் திருமால் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்