பள்ளி தலைமை ஆசிரியையை கண்டித்து மாணவர்கள் போராட்டம்

காரைக்குடி அருகே பள்ளி தலைமை ஆசிரியையை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-21 18:45 GMT

காரைக்குடி, 

மாணவர்கள் புகார்

காரைக்குடி அருகே உள்ள ஆலங்குடியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஆலங்குடி, மேலமகாணம், கருகுடி, கூத்தக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக சித்ரா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மீது மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் பல்வேறு புகார்களை கூறி வந்தனர்.

குறிப்பாக பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டால் எவ்வித பதிலும் கூறாமல் அலட்சியமாக இருந்து வந்தாகவும், பள்ளி மாணவ, மாணவிகளை தனது சொந்த தேவைக்காக அனுப்புவதாகவும், பள்ளியில் தேங்கும் குப்பைகளை மாணவ, மாணவிகளை அகற்றும்படி கூறுவதாககவும், மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் புகார் கூறி வந்தனர்.

போராட்டம்

இந்நிலையில் நேற்று முன்தினம் திடிரென இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் சிலர் சேர்ந்து பள்ளி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட இடைநிலை கல்வி அதிகாரி உதயகுமார், திருப்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள், பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்