மாணவர்கள் தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்

மாணவர்கள் தங்களது தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோடை கால பயிற்சி நிறைவு விழாவில் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா கூறினார்.;

Update: 2022-06-07 14:44 GMT

ஊட்டி, ஜூன்.8-

மாணவர்கள் தங்களது தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோடை கால பயிற்சி நிறைவு விழாவில் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா கூறினார்.

கோடைகால பயிற்சி முகாம்

தமிழகத்தின் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தனித்திறன்களை மெருகேற்றும் நோக்கத்துடனும், கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் களித்திடும் வகையிலும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 'புதியன விரும்பு' என்ற பெயரில் கோடை பயிற்சி முகாம் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் உள்பட 5 இடங்களில் நடந்தது.

இதில் சென்னை, கோவை, நெல்லை, மதுரை, திருச்சி உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1,250 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். கடந்த 3-ந் தேதி முதல் நேற்று வரை பயிற்சி முகாம் நடந்தது. நிறைவு நாளான நேற்று மாணவ-மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில் மாநில திட்ட இயக்குனர் சுதன், மாவட்ட கல்வி அதிகாரி புனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தனித்திறமை

குன்னூரில் நடந்்த விழாவில் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், மாணவ-மாணவிகள் கல்வி மட்டுமின்றி தனித்திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த பயிற்சி முகாம் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் எதிர்காலத்தில் தங்கள் உயர் கல்வியை சுலபமாக தேர்ந்தெடுக்க முடியும். இந்த பயிற்சி முகாமில் கூடுதலாக என்னனென்ன பயிற்சிகளை சேர்க்கலாம் என்று கருத்து கூறலாம். இந்த ஆண்டு மட்டுமின்றி எதிர்வரும் ஆண்டுகளிலும் இந்த பயிற்சி முகாம் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

பயிற்சி முகாம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

பல்துறை சாதனையாளர்கள்

பயிற்சி முகாமில் பல்வேறு துறைகளில் சாதித்த எழுத்தாளர்கள், கவிஞர்கள் உள்பட பலர் மூலம் மாணவ- மாணவிகளுக்கு 5 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்கள் பள்ளி பாடத்திட்டத்தை தாண்டி வெளியுலகம் குறித்து நன்றாக தெரிந்து கொள்ள முடியும்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு வழங்கப்படுவது போல், இந்த முகாமில் மாணவ -மாணவிகளுக்கு தலைமை பண்பு, பெண்கள் உரிமை, சுற்றுச்சூழல் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விளக்கப்பட்டது. மேலும் கலைக் குழுக்கள் மூலம் கவிதை, கதை, குறும்படம், நடனம் மற்றும் கலையின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறப்பட்டது. இதேபோல் தேயிலை தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களுக்கு ஒருநாள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது

இதுகுறித்து பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகள் கூறுகையில், கோடை கால பயிற்சி முகாம் நீலகிரி மாவட்டத்தில் நடத்தப்பட்டது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வகுப்பில் எங்களிடம் உள்ள தனித்திறமைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதனால் எங்களுக்கு பயம் குறைந்து, தன்னம்பிக்கை அதிகரித்து உள்ளது என்று கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்