அரசு பஸ்சில் மாணவர்கள் திடீர் மோதல்; 5 பேர் கைது

நெல்லையில் அரசு பஸ்சில் மாணவர்களுக்கு இடைேய ஏற்பட்ட மோதலில் 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2022-07-22 19:54 GMT

நெல்லையில் அரசு பஸ்சில் மாணவர்களுக்கு இடைேய ஏற்பட்ட மோதலில் 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பஸ்சில் பயணம் செய்தபோது...

நெல்லை பாளையங்கோட்டையில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளி உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

இந்த பள்ளி மாணவர்களுக்கும், பாளையங்கோட்டை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் டுடோரியல் சென்டரில் படிக்கும் மாணவர்களுக்கும் பஸ்சில் பயணம் செய்வது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார், மோதலில் ஈடுபட்ட மாணவர்களை எச்சரித்து அனுப்பினர்.

மாணவர்கள் திடீர் மோதல்

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் அரசு டவுன் பஸ்சில் படிக்கட்டில் பயணம் செய்வது தொடர்பாக மீண்டும் அந்த மாணவர்களுக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.

அந்த பஸ், பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் பஸ் நிறுத்தத்தில் நின்றபோது, பஸ்சில் இருந்த டுடோரியல் மாணவரை பள்ளிக்கூட மாணவர்கள் தாக்கினர். இந்த மோதலில் அந்த மாணவர் காயம் அடைந்தனர்.

5 பேர் கைது

இதுகுறித்து அந்த மாணவர் தனது பெற்றோருடன் வந்து பாளையங்கோட்டை போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட பள்ளிக்கூட மாணவர்கள் 5 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள், நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்