மாணவர் சாவில் சந்தேகம்; உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல்
மாணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.;
லால்குடி:
வாகனம் மோதி சாவு
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள அன்பில் கிராமத்தை சேர்ந்த சிவகுமாரின் மகன் சசிகுமார்(வயது 17). இவர் ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சமயபுரம் நரசிங்கமங்கலத்தில் நடைபெறும் கபடி போட்டிக்கு சசிகுமார் மற்றும் அன்பில் சங்கமபுரத்தை சேர்ந்த நாகராஜனின் மகன் குகன் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றனர். மாந்துறை பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது, அந்த வழியாக வந்த வாகனம் மோதியது. இதில் சசிகுமார் சாலையில் தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த வழியாக சென்றவர்கள், படுகாயத்துடன் கிடந்த சசிகுமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர்.
உறவினர்கள் மறியல்
இந்நிலையில் சசிகுமாரின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது உடலை அன்பில் சாலையில் வைத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அஜய் தங்கம், தாசில்தார் விக்னேஷ், இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது மருத்துவ அறிக்கை மற்றும் விசாரணையின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.