நண்பனின் பிறந்த நாள் விழாவில் தெருவில் கேக் வெட்டி சாணத்தால் அபிஷேகம் செய்த மாணவர்கள்

சாமிதோப்பு அருகே நண்பனின் பிறந்த நாள் விழாவில் தெருவில் கேக் வெட்டி சாணத்தால் அபிஷேகம் செய்து, சரமாரியாக மூட்டை வீசினர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Update: 2023-03-27 21:00 GMT

தென்தாமரைகுளம்:

சாமிதோப்பு அருகே நண்பனின் பிறந்த நாள் விழாவில் தெருவில் கேக் வெட்டி சாணத்தால் அபிஷேகம் செய்து, சரமாரியாக மூட்டை வீசினர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிறந்த நாள் ெகாண்டாட்டம்

பிறந்தநாள் என்றாலே புதிய ஆடை அணிவார்கள், கோவிலுக்கு செல்வார்கள், சிலர் நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடுவார்கள். உற்சாகத்தில் கேக் எடுத்து முகத்தில் பூசுவார்கள், ஸ்பிரே அடித்து மகிழ்வார்கள். ஆனால் இந்த வாலிபர்கள் வித்தியாசமான முறையில் பிறந்தநாள் கொண்டாடி உள்ளனர்.

குமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே உள்ள செட்டிவிளை கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் தங்களில் யாருக்காவது பிறந்தநாள் என்றால் பொது வெளியில் பிறந்தநாள் கொண்டாடுபவரின் உடலெல்லாம் சாணத்தை ஊற்றி, முட்டையை வீசியும் கொண்டாடுவது வழக்கமாம்.

கேக் வெட்டினார்

நேற்று முன்தினம் கல்லூரி மாணவர் ஒருவருக்கு பிறந்தநாளாம். இதற்காக நண்பர்கள் எல்லாம் சேர்ந்து காசு வசூல் செய்து கேக் ஆர்டர் செய்திருக்கிறார்கள். அந்தி மயங்கி இருள் சூழ்ந்ததும் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு தயாரானார்கள். கேக் வந்ததும் சாலையோரமாக தெருவிளக்கு வெளிச்சத்தில் ஒரு நாற்காலியை போட்டு அதில் கேக்கை வைத்து மெழுகுவர்த்தியும் ஏற்றினார்கள்.

'கேக்கை வெட்டுடா' என்றதும் அவரும் மகிழ்ச்சியுடன் மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு கேக் வெட்டினார். அவ்வளவுதான் சுற்றி நின்ற நண்பர்கள் அவர் மீது சரமாரியாக முட்டைகளை எடுத்து வீசினார்கள். உடல் முழுவதும் முட்டை கரு வடிந்தது. சிலர் முட்டையை எடுத்து அவரது முகத்திலும் தேய்த்து விட்டனர். அதோடு விடவில்லை பக்கெட்டுகளில் தயாராக கரைத்து வைத்திருந்த மாட்டு சாணத்தை எடுத்து தலையில் ஊற்றி சாணத்தில் அபிஷேகம் செய்தனர். சிலர் சாணத்தை எடுத்து வீசினார்கள். இன்னும் சிலர் சாணத்தை முகத்திலும் பூசினார்கள்.

வீடியோ வைரல்

இதனால் பிறந்தநாள் கொண்டாடிய அந்த மாணவரின் உடல் முழுவதும் சாணமும், முட்டையுமாக வடிந்தது. அந்த வாலிபரும் அவ்வப்போது தனது முகத்தில் வந்து விழுந்த சாணத்தையும் முட்டையையும் துடைத்தபடி நாற்றத்தால் முகத்தை சுளித்துக்கொண்டார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு ஒரு அளவே இல்லையா என்று சொல்லிச் சென்றனர்.

இதை செல்போனில் பதிவு செய்த யாரோ ஒருவர் இணையத்தில் பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளத்தி்ல வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்