அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
நீட், கியூட் போன்ற நுழைவுத்தேர்வுகளை ரத்து செய்யக்கோரி தஞ்சையில், அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
தஞ்சாவூர்;
நீட், கியூட் போன்ற நுழைவுத்தேர்வுகளை ரத்து செய்யக்கோரி தஞ்சையில், அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு நேற்று காலை கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு இந்திய மாணவர் சங்க கிளை நிர்வாகி தமிழரசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அர்ஜூன் முன்னிலை வகித்தார். கிளை நிர்வாகி ஜெகன் வரவேற்றார். இதில் மாவட்ட செயலாளர் சந்துரு, கிளை நிர்வாகிகள் எடிசன், ராஜதுரை, மூர்த்தி, நித்தீஷ், சரண், ஹரிஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
நீட், கியூட் தேர்வு
ஆர்ப்பாட்டத்தில், ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இந்தியா முழுவதும் உள்ள மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கு பொதுவான நுழைவுத்தேர்வு(கியூட்) நடத்தப்படும் என இந்திய கல்வித் துறை அமைச்சகத்தின் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வேண்டும்.நிறுத்தப்பட்ட கல்வி உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். உயர்த்தப்பட்ட கல்வி கட்டணங்களை திரும்பப் பெற வேண்டும். கல்வி நிலையங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.இதில் வகுப்புகளை புறக்கணித்து விட்டு ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.