வானவில் மன்றம் மூலம் 26 ஆயிரம் மாணவர்கள் பயன்
திருவாரூர் மாவட்டத்தில் வானவில் மன்றத்தின் மூலம் 26 ஆயிரத்து 377 மாணவர்கள் பயன்பெறுவதாக மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.
திருவாரூர் மாவட்டத்தில் வானவில் மன்றத்தின் மூலம் 26 ஆயிரத்து 377 மாணவர்கள் பயன்பெறுவதாக மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காலை உணவு திட்டம்
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வியினை ஊக்கப்படுத்தும் வகையில் முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு கல்வி சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து அரசுப்பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் அறிவியல் மற்றும் கணிதம் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் எங்கும் அறிவியல், யாவும் கணிதம் என்பதை கருத்தில் கொண்டு தமிழக அரசு வானவில் மன்றத்தை தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வானவில் மன்றம்
மாணவ, மாணவிகளிடையே உள்ள இயல்பான படைப்பாற்றல் ஆர்வத்தினை கற்றலுக்கு பயன்படுத்துதல், அறிவியல் கற்பதன் மூலமாக கிடைக்கும் ஆர்வத்தினை தக்க வைத்தல், இந்த ஆர்வத்தின் மூலம் புதுமைகளை காணும் மனப்பாங்கினை தமக்கான மொழியில் பகிர்ந்து அறிவியல் மொழி பழகுதல், அறிவியல் மனப்பான்மையை பரவலாக்குதல், அன்றாட வாழ்க்கையிலுள்ள அறிவியலை உணர்தல், சமூகவியல் இலக்கியத்துடனான அறிவியலைப் புரிந்து கொள்ளுதல் ஆகியவை வானவில் மன்றத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த திட்டத்தின்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 349 அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டது. இதன்மூலம் 6-ம் வகுப்பு முதல் 8 -ம் வகுப்பு வரை படிக்கும் 26 ஆயிரத்து 377 மாணவ, மாணவிகள் பயன் அடைந்து வருகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.