மாணவி மரணம்: விசாரணையை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் - அண்ணாமலை

மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

Update: 2022-07-17 08:32 GMT

சென்னை,

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி. அவர் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தநிலையில் விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மாணவி உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் போராட்டம் நடைபெற்ற நிலையில், போராட்டம் கலவரமாக மாறியதைத் தொடர்ந்து நிலமையை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிக்கல் நீடித்து வருகின்றது.

இந்த நிலையில், மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

என்ன நடக்கிறது கள்ளக்குறிச்சியில்?

ஆளும் திமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர், காவல்துறையினர் மீது மரியாதை இழந்து விட்டனர், கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வராமல் டிஜிபி அவர்கள் விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்கிறார்.

உளவுத்துறை ஏடிஜிபி தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே ஆர்வமாக உள்ளார், மாணவி ஸ்ரீமதியின் தாயாரைச் சென்று சந்திக்கக் கூட நேரமில்லாத பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்; இவை அனைத்தும் ஒரு திறனற்ற அரசின் வெளிப்பாடாகவே தெரிகிறது.

தவறு யார் செய்திருந்தாலும் அவர் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் அம்மாவட்டத்தைச் சேராதவர்களாக இருக்க வேண்டும் மற்றும்

தமிழக பாஜக இதற்கு முன் கூறியது போல் இந்த வழக்கின் விசாரணையை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்