மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த மாணவருக்கு பாராட்டு
அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த மாணவருக்கு பாராட்டு அளிக்கப்பட்டது
சிவகிரி:
தென்மலை அருகே உள்ள எட்டிசேரி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி முத்துக்குமார்-மாரியம்மாள் மகன் வேல்முருகன். கடந்த ஆண்டு தென்மலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து நீட் தேர்வில் 350 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையில் அரசு 7.5 சதவீத ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டின்படி நேற்று மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங் நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் தென்மலை அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர் வேல்முருகனுக்கு 113-வது இடம் கிடைத்து மருத்துவ படிப்பில் சேருவதற்கான ஆணை கிடைத்தது.
நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ள தென்மலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் வேல்முருகனுக்கு பள்ளியின் சார்பாக, தலைமையாசிரியர் கருப்பசாமி, தென்மலை ஊராட்சி மன்ற தலைவர் மீன லதா முத்தரசு பாண்டியன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகன், பள்ளி மேலாண்மை குழு பாப்புராஜ் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.