அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை

தென்காசி மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது;

Update: 2022-06-30 16:28 GMT

தென்காசி அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் டி.ராஜு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தென்காசி மாவட்டம் தென்காசி, கடையநல்லூர், வீரகேரளம்புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையங்களில் பிட்டர், எலக்ட்ரீசியன், வயர்மேன், கம்மியர் மோட்டார் வாகனம், பம்பு ஆப்ரேட்டர் மற்றும் மெக்கானிக் ஆகிய தொழில் பிரிவுகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

இதில் வயர்மேன், வெல்டர் ஆகிய பிரிவுகளுக்கு குறைந்தபட்சம் 8-வது வகுப்பும் மற்ற தொழில் பிரிவுகளுக்கு குறைந்தபட்சம் 10-வது வகுப்பு படித்திருக்க வேண்டும். வயது வரம்பு 14 முதல் 40 வயது வரை ஆகும். இந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மாதம் ரூ.750, லேப்-டாப், சைக்கிள், ஆண்டுக்கு 2 செட் சீருடைகள், ஒரு ஜோடி காலணி, பாட புத்தகங்கள், வரைபட கருவிகள், இலவச பஸ் பாஸ், சலுகை கட்டண ரயில் பாஸ், அரசு இலவச உணவுடன் கூடிய தங்கும் விடுதி வசதி ஆகியன வழங்கப்படுகிறது.

இதில் சேர விரும்புபவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணைய தலை முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பயிற்சி பெறும் மாணவர்கள் பயிற்சி முடிவின்போது மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 10-ம் வகுப்பிற்கு இணையாகவும், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பயிற்சி பெறும் மாணவர்கள் பயிற்சி முடிவின்போது மொழிப்பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 12-ம் வகுப்பிற்கு இணையாகவும் கல்விச் சான்று பெற தகுதியுள்ளவர்கள் ஆவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை மாதம் 20-ந் தேதி ஆகும். தென்காசி, கடையநல்லூர், வீரகேரளம்புதூர் அரசு ஐ.டி.ஐ. அலுவலகங்களில் மாணவர் சேர்க்கை உதவி மையங்கள் உள்ளன. உதவிக்கு மாணவர்கள் நேரடியாக உதவி மையங்களை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்