சாலையை முழுமையாக அமைக்க கோரி போராட்டம்
காரியாபட்டி அருகே சாலையை முழுமையாக அமைக்க கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே சாலையை முழுமையாக அமைக்க கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை அமைக்க எதிர்ப்பு
காரியாபட்டி அருகே உள்ள மல்லாங்கிணறு பேரூராட்சி அயன்ரெட்டியபட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர்கள் வசித்துவரும் காலனி பகுதியில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பேவர் பிளாக் சாலை அமைத்து வருகின்றனர். மேலும் ஒரு பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்க ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து தடுத்து வருவதால் இன்னும் அப்பகுதியில் பேவர் பிளாக் சாலை போடாமல் இருந்து வருகிறது.
இந்த சாலையை முழுமையாக அமைக்க வேண்டும் என்று மல்லாங்கிணறு பேரூராட்சி மற்றும் மாவட்ட கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தை
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் காரியாபட்டியிலிருந்து- விருதுநகர் செல்லும் சாலை அயன் ரெட்டியபட்டி விலக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியினை பிடித்தவாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மல்லாங்கிணறு பேரூராட்சி தலைவர் துளசிதாஸ், மல்லாங்கிணறு சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்து மற்றும் போலீசார் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் ெபாதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் சாலை முழுமையாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி தலைவர் துளசிதாஸ் கூறினார். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.