நல்லம்பள்ளி:
அதியமான்கோட்டையில் சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குண்டும், குழியுமான சாலை
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் 2 ஆயிரம் வீடுகள், ஊராட்சி மன்ற அலுவலகம், துணை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை உள்ளன. இதனிடையே அதியமான்கோட்டை பைபாஸ் சாலை சந்திப்பில் இருந்து உடையார்தெரு வரை தார்சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் சாலையில் மழைநீர் தேங்கி, சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நாற்று நடும் போராட்டம்
இந்த நிலையில் சாலையை சீரமைக்க கோரி நேற்று பொதுமக்கள் சேற்றில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் முனிராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலை அமைப்பது குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.