முதல்-அமைச்சர் அறிவிப்பு வெளியிடும் வரை போராட்டம் தொடரும்: ஆசிரியர்கள் சங்கத்தினர் தகவல்

முதல் அமைச்சர் அறிவிப்பு வெளியிடும் வரை போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.

Update: 2023-10-01 21:40 GMT

சென்னை,

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்களும், 12 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களாக பணியாற்றி வரும் ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், டெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் போட்டித் தேர்வு இல்லாமல் தங்களை ஆசிரியர் பணியிடங்களில் நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் நேற்று வரை சுமார் 180 பேர் உடல்நலம் பாதிப்படைந்து உள்ளனர்.

இந்த நிலையில், 3 பிரிவு ஆசிரியர்களின் சங்க பிரதிநிதிகளுடன் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, நிதித்துறை கூடுதல் செயலாளர் அருண்சவுந்தர் தயாளன், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டாத நிலையில் 3 பிரிவு ஆசிரியர்களும் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்வதாக தெரிவித்துள்ளனர்.

முதல்-அமைச்சர் அறிவிக்க வேண்டும்

பேச்சுவார்த்தை குறித்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் கூறியதாவது:-

நாங்கள் 2018-ம் ஆண்டு இதே கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டபோது எங்களை சந்தித்த அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், இப்போதைய முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் எங்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது, சரியானது எனவே கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

தற்போது 5 ஆண்டுகள் கடந்துவிட்டன. தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2½ ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இப்போதும் எங்களிடம் கால அவகாசம் கேட்கிறார்கள். 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதலாவது சம வேலைக்கு சம ஊதியம் அளிக்குமாறு கோரினோம். நிலுவைத் தொகைக்கூட வழங்க வேண்டாம் என்றும் தெரிவித்து உள்ளோம். அதன் பிறகும் கால அவகாசம் கேட்கிறார்கள். நாங்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டோம்.

2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே நாங்கள் பேராசிரியர் அன்பழகனார் வளாகத்தை விட்டு வெளியே செல்லுவோம் என்று தெரிவித்து விட்டோம். அதற்கு அவர்கள் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

போராட்டம் தொடர்கிறது

தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க மாநில தலைவர் சேசுராஜா கூறும்போது, "நாங்கள் பணி நிரந்தரம் கோரினோம். இப்போதைக்கு முடியாது என்றார்கள். சரி, பகுதிநேரத்தை முழு நேரமாக மாற்றி ரூ.25 ஆயிரம் ஊதியம் வழங்குங்கள், நிதிநிலை சரியான பிறகு பணி நிரந்தரம் செய்யுங்கள் என்றோம். சட்டம் மற்றும் நிதித்துறையினருடன் ஆலோசித்துதான் கூற முடியும் என்றார்கள். எனவே எங்கள் போராட்டம் தொடர்கிறது" என்றார்.

ஒருங்கிணைந்த 2013 தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு கூட்டு நலச்சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் கூறும்போது, "எங்களுக்கு பணி நியமன தேர்வு நடத்தாமல் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு மூலம் பணி வழங்குமாறு கோரினோம். கால அவகாசம் கேட்டார்கள். எனவே எங்களது போராட்டம் தொடர்கிறது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்