பாத்திர தொழிலாளர்களின் கூலி உயர்வு தொடர்பாக 1-ந்தேதி அடையாள வேலை நிறுத்தம்

பாத்திர தொழிலாளர்களின் கூலி உயர்வு தொடர்பாக உற்பத்தியாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணாவிட்டால் வரும் 1-ந்தேதி அடையாள வேலை நிறுத்தம் செய்வது என்று அனைத்து தொழிற்சங்க கூட்டுக் கமிட்டிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.;

Update: 2023-01-29 18:14 GMT

பாத்திர தொழிலாளர்களின் கூலி உயர்வு தொடர்பாக உற்பத்தியாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணாவிட்டால் வரும் 1-ந்தேதி அடையாள வேலை நிறுத்தம் செய்வது என்று அனைத்து தொழிற்சங்க கூட்டுக் கமிட்டிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பாத்திரத்தொழிலாளர்கள்

திருப்பூர் அனுப்பர்பாளையம் மற்றும் சுற்று வட்டாரத்தில் 300-க்கும் மேற்பட்ட பாத்திர பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பாத்திர தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த மாதம் 31-ந்தேதியுடன் நிறைவடைந்தது.

இதையடுத்து எவர்சில்வர் பாத்திர வகைகளுக்கு 50 சதவீதமும், பித்தளை, தாமிரம், வார்ப்பு வகைகளுக்கு 60 சதவீதமும், ஈயப்பூச்சுக்கு 70 சதவீதமும் கூலி உயர்வு கேட்பது என முடிவு செய்யப்பட்டு, எவர்சில்வர் மற்றும் பித்தளை பாத்திர உற்பத்தியாளர் சங்கங்களுக்கு கோரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பாத்திர தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க 1 ஆண்டு அவகாசம் வழங்க வேண்டும் என்றும், அதுவரை தற்போது உள்ள கூலியே வழங்க முடிவு செய்திருப்பதாகவும் அறிவித்தனர்.

வேலை நிறுத்தம்

இந்த நிலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டுக் கமிட்டிக் கூட்டம் நேற்று மாலை அனுப்பர்பாளையத்தில் உள்ள சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது. இதில் தேவராஜ் (ஏ.டி.பி.), ரங்கராஜ், குப்புசாமி (சி.ஐ.டியு) ரத்தினசாமி வேலுச்சாமி, (எல்.பி.எப்.), செல்வராஜ், நாகராஜ் (ஏ.ஐ.டி.யு.சி), பாண்டியராஜ் (ஹெச்.எம்.எஸ்.), அசோக் (ஐ.என்.டி.யு.சி), அர்ஜூனன், ஆறுமுகசாமி (காமாட்சியம்மன் பாத்திர சங்கம்) சீனிவாசன், லட்சுமிநாராயணன் (பி.எம்.எஸ்.) ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கூலி உயர்வு தொடர்பாக தொழிற்சங்கங்கள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை எவர்சில்வர் பாத்திர சங்கத்தினர் நிராகரித்ததை கண்டிப்பதுடன், உரிய பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான கூலி உயர்வு வழங்க முன்வர வேண்டும். கூலி உயர்வு வழங்காதபட்சத்தில் வரும் 1-ந்தேதி அனுப்பர்பாளையம் சுற்று வட்டாரத்தில் உள்ள பாத்திர பட்டறைகளில் பணிகளை நிறுத்தி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும், மேலும் திலகர்நகர், அனுப்பர்பாளையம், அனுப்பர்பாளையம்புதூர் பகுதிகளில் உள்ள உள்ள பாத்திர பட்டறைகளில் இருந்து தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்று எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர்கள் சங்கம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்