கவனக்குறைவாக செயல்பட்டு மனித உயிரிழப்பு ஏற்பட்டால் கடும் நடவடிக்கை

பொதுமக்களின் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் கவனக்குறைவாக செயல்பட்டு மனித உயிரிழப்புகள் ஏற்பட காரணமாக இருந்தால் சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பழனி எச்சரிக்கை விடுத்துள்ளார்

Update: 2023-06-27 18:45 GMT

விழுப்புரம்

ஆய்வுக்கூட்டம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழக துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கி, விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த காலங்களில் மின்சாரம் தாக்கி மனித உயிரிழப்புகள், கால்நடை உயிரிழப்புகள் ஏற்பட்டது குறித்து மின்வாரியத்துறை அலுவலர்களிடையே ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாத வண்ணம் தடுக்கும்பொருட்டு பொதுமக்களிடம் இருந்து வரப்பெறும் தொலைபேசி அழைப்புகளை தவிர்க்காமல் எடுத்து பேசி, பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மண்டல, வட்டார அளவில் வாட்ஸ்-அப் குழுக்களை ஏற்படுத்தி உடனுக்குடன் புகார் செய்திகளை களநிலை அலுவலர்கள் வரை பரிமாற்றம் செய்து உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மனித உயிரிழப்புகள் மற்றும் கால்நடை உயிரிழப்புகள் தவிர்க்கப்பட வேண்டும்.

எதிர்வரும் காலங்கள் மழைக்காலம் என்பதால் அனைத்து மின் பாதைகளையும், மின்மாற்றிகளையும் ஆய்வு செய்து நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் புகார் அளித்த பின்னரும் நடவடிக்கை எடுக்காமல் கவனக்குறைவாக செயல்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுமேயானால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது மிக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், உதவி ஆணையர் (கலால்) சிவா மற்றும் அனைத்து தாசில்தார்கள், மின்வாரியத்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்