கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்றால் கடும் நடவடிக்கை
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விற்பனையாளர்களுக்கு கலெக்டர் பழனி எச்சரிக்கை விடுத்துள்ளார்;
விழுப்புரம்
ஆய்வுக்கூட்டம்
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளிலும், அனைத்து வகை மதுபானங்களின் குறைந்தபட்ச சில்லரை விற்பனை விலை அடங்கிய விலைப்பட்டியலை வாடிக்கையாளர்களுக்கு பார்வையில் தெரியும்படி வைக்கப்பட வேண்டும்.
கடும் நடவடிக்கை
வாடிக்கையாளர்கள், விலைப்பட்டியலில் உள்ளவாறு சரியான விலைக்கு வாங்கவும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் உடனடியாக 9445029730 என்ற தொலைபேசி எண்ணிலும், 18004252015 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ்-அப் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம். மேலும் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது டாஸ்மாக் மேலாளர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் மற்றும் அனைத்து தாசில்தார்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.