உரங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை

உரங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-09-28 18:45 GMT

கடும் நடவடிக்கை

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் விவசாயிகளுக்கு உரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் போதிய அளவு உரங்கள் கையிருப்பில் உள்ளது. பெரம்பலூர் மாவட்ட உர விற்பனையாளர்கள் ஆதார் அட்டையுடன் வரும் விவசாயிகளுக்கு மட்டுமே உரம் விற்பனை செய்ய வேண்டும். இந்த உத்தரவை மீறிடும் உர விற்பனை நிலையங்கள் மீது உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985-ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மொத்த உர விற்பனையாளர்கள் வெளி மாவட்டங்களுக்கு உரங்களை மாற்றம் செய்திடவும், விற்பனை செய்திடவும் கூடாது. மேலும் உரங்களை வெளி மாவட்டங்களில் இருந்தும் கொள்முதல் செய்யக்கூடாது. விவசாயிகளின் தேவைக்கு மேல் அதிகமாகவும் மற்றும் இணை உரம் வழங்கக்கூடாது. ஒரே நபருக்கு அதிக அளவு உரம் வழங்கக்கூடாது. குறிப்பிட்ட விவசாயிகளின் பெயரில் அதிகப்படியாக உர விற்பனை கண்டறியப்பட்டால் சில்லரை விற்பனை உரிமம் எந்த முன் அறிவிப்பும் இன்றி ரத்து செய்யப்படும். விவசாயம் மேற்கொள்ளாத நபர்களுக்கு உரம் விற்பனை செய்யக்கூடாது.

புகார்

திடீர் ஆய்வின் போது மேற்காணும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உர விற்பனையாளர்களின் விற்பனை உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டு, அவர்கள் மீது குற்ற வழக்கு தொடரப்படும். விவசாயிகள் தாங்கள் உரம் வாங்க செல்லும் போது ஆதார் அட்டையுடன் சென்று உரம் பெற்றுக்கொண்டு உரிய பட்டியல் கேட்டு பெற வேண்டும். உர மூட்டையின் மேல் அச்சிடப்பட்ட அதிகபட்ச விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான புகார்களை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை 9487073705 (தரக்கட்டுப்பாடு பெரம்பலூர்), 8056782946 (வேப்பந்தட்டை), 9787061637 (பெரம்பலூர்), 9443026769 (ஆலத்தூர்), 9442534865 (வேப்பூர்) ஆகியோரை செல்போன் எண்கள் மூலம் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்