அதிக வட்டி வசூலிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை

அதிக வட்டி வசூலிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் கூறினார்.

Update: 2022-06-15 17:22 GMT


அதிக வட்டி வசூலிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் கூறினார்.

மக்கள் குறைதீர்வு கூட்டம்

வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துசாமி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பூபதிராஜா, பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்கள் பெற்றார்.

பின்னர் அவர் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை அதாவது 2-வது மற்றும் 4-வது புதன்கிழமைகளில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடத்தப்படும். இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு காவல்துறை மற்றும் குற்ற புகார்கள் சம்பந்தமான மனுக்களை அளிக்கலாம். மற்ற துறையை சார்ந்த மனுக்களாக இருந்தால் அதுதொடர்பாக வழிகாட்டப்படும்.

கடும் நடவடிக்கை

ஒருவருக்கு கடன் கொடுத்தால் அவரிடம் இருந்து அரசு தெரிவித்துள்ள சட்டத்தின்படி அந்த பணத்துக்கு வட்டி பெற வேண்டும். அதிக வட்டி வசூலிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கூட்டத்தில் அளிக்கப்படும் புகார்கள் மீது 15 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்றார்.

கூட்டத்தில், வேலூரை அடுத்த பூட்டுத்தாக்கு ஊராட்சிமன்ற துணைத்தலைவர் சசிகலா மற்றும் கிராமமக்கள் அளித்த மனுவில், பூட்டுத்தாக்கு அண்ணாநகரில் பூங்கா அமைக்க 49 சென்ட் நிலம் ஊராட்சிக்கு தானமாக கொடுக்கப்பட்டது. அந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து போலியாக பத்திரம் தயாரித்து விற்பனை செய்துள்ளனர். அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பூங்கா அமைக்க கொடுக்கப்பட்ட இடத்தை மீட்டுத்தர வேண்டும் என்று கூறியிருந்தனர். குறைதீர்வு நாள் கூட்டத்தில் நிலத்தகராறு, அதிக வட்டி வசூலிப்பு, பணமோசடி உள்பட 20-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்