குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை-போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை

போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

Update: 2022-07-06 12:43 GMT

கோத்தகிரி

போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

விழிப்புணர்வு கூட்டம்

கோத்தகிரி அருகே உள்ள சோலூர் மட்டம் போலீஸ் நிலையத்தில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமை வகித்தார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணகுமார், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு, சோலூர்மட்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கூட்டாடா எஸ்டேட், பொம்மன் எஸ்டேட், கோடநாடு எஸ்டேட், சிவகாமி எஸ்டேட், கீழ் கோத்தகிரி மற்றும் சோலூர்மட்டம் கிராமப் பகுதிகளைச் சேர்ந்த வாடகை டாக்சி ஓட்டுனர்கள், வாகன உரிமையாளர்கள், எஸ்டேட் நிர்வாகிகள் ஆகியோருக்கு வாகன விபத்துக்களைத் தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

ஓட்டுனம் உரிமம் ரத்து

அப்போது அவர்கள் கூறியதாவது:- தேயிலைத் தோட்ட வேலைக்கு லாரிகள், டிராக்டர்கள் மற்றும் சரக்கு வாகனங்களில் தொழிலாளர்களை ஏற்றிச்செல்லக் கூடாது. குடிபோதையில் வாகனங்களை இயக்குபவர்களுக்கு அதிகமான அபராதம் விதிக்கப்படுவதுடன், அவர்களது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்.

போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.. இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தனிப்பிரிவு போலீஸ்காரர் சரவணன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்