வால்பாறையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தெருவிளக்குகள் எரிவதை உறுதி செய்ய வேண்டும்-நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

வால்பாறையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தெருவிளக்குகள் எரிவதை உறுதி செய்ய வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.;

Update: 2022-12-27 18:45 GMT

வால்பாறை

வால்பாறையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தெருவிளக்குகள் எரிவதை உறுதி செய்ய வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

நகராட்சி கூட்டம்

வால்பாறையில் நகராட்சி மன்ற கூட்டம் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு தலைவர் அழகு சுந்தரவள்ளி தலைமை தாங்கினார். துணை தலைவர் செந்தில்குமார், ஆணையாளர் பாலு முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் விவாதத்தில் ஈடுபட்டனர்.

1-வது வார்டு செல்வக்குமார்:- எனது வார்டில் வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை. நகராட்சி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து எந்தவித அடிப்படை வசதிகளும் நடைபெறவில்லை. சத்துணவு மையங்களில் உணவு பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கு அறைகள் கிடையாது. பல கூட்டத்தில் எழுதிக் கொடுத்தும் இது நாள் வரை தெருவிளக்கு அமைத்து கொடுக்கப்படவில்லை.

2-வது வார்டு கனகமணி:- எனது வார்டில் சக்தி எஸ்டேட் செல்லும் சாலையில் செல்வதற்கு சுற்றுலா பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியூர்களிலிருந்து வியாபாரிகள் வருவதால் உள்ளூர் நகராட்சி கடைவியாபாரிகளின் வியாபாரம் பாதிக்கப்படுகிறது.

காலம் கடத்தாமல்

3-வது வார்டு வீரமணி: ஏற்கனவே 950 தெருவிளக்குகள் வாங்கி பயன்படுத்தப்படாமல் இருந்து வருகிறது. அதை வார்டு பகுதியில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வால்பாறை நகராட்சி பகுதிக்கு விதிவிலக்கு பெற்று உயர்மின் கோபுர விளக்குகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பாறைமேடு பகுதியில் கழிப்பிடம் கட்டித்தர வேண்டும்.சத்துணவு பணியாளர்களுக்கு உரிய நேரத்திற்கு மாத சம்பளம் வழங்கப்படுவதில்லை. கொசு மருந்து அடிப்பதற்கு நிரந்தரமாக பணியாளர்களை நியமிக்க வேண்டும். மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சி பணிகளுக்கு நிர்வாக அனுமதியை காலங்கடத்தாமல் பெற்று பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5-வது வார்டு கவிதா: கடந்த 10 மாதங்களாக பணிகள் நடைபெறாததால் மன்ற கூட்டத்தில் தலையாட்டி பொம்மைகளாக இருப்பதாக பொது மக்கள் பேசுகின்றனர். ஊராட்சி பள்ளிகளாக உள்ளதை நகராட்சி பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்களிடம் மனுக்களை பெற்று மன்ற கூட்டத்தில் கொடுக்கும் போது அந்த பணிகள் நடைபெற்றால் தான் எங்களுக்கும் அரசுக்கும் பெருமை. மேலும் அனைத்து வார்டுகளில் தெருவிளக்குகள் எரிவதை உறுதி செய்ய வேண்டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தினார்கள்.

வளர்ச்சி பணிகள்

இதற்கு பதிலளித்து பேசிய தலைவர் அழகுசுந்தரவள்ளி கூறியதாவது:- அனைத்து வார்டு பகுதிகளிலும் வளர்ச்சி பணிகள் விடுபடாமல் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றார்.

ஆணையாளர் பாலு:- தமிழக சுகாதார துறையிலிருந்து ஊர்நலவாழ்வு மையம் அமைக்க ரூ.25 லட்சம் முடீஸ் பகுதிக்கும், ரூ.25 லட்சம் சோலையாறு நகர் பகுதிக்கும் வந்துள்ளது. சோலையாறு நகர் பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் முடீஸ் பகுதியில் இடம் இல்லாமல் உள்ளது. எனவே வார்டு கவுன்சிலர் எஸ்டேட் நிர்வாகத்திடம் பேசி இடம் பெற்றுக் கொடுக்கலாம்.உயர்மின்கோபுர தெருவிளக்குகள் அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது. எனவே தமிழக அரசிடம் வால்பாறை பகுதிக்கு விதிவிலக்கு கொடுக்க கவுன்சிலர்கள் கடிதம் கொடுக்க வேண்டும். 

Tags:    

மேலும் செய்திகள்