கோத்தகிரியில் 'ஸ்ட்ராபெரி' பழம் விளைச்சல் குறைந்தது-விவசாயிகள் கவலை

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சீசன் இல்லாததால் ஸ்ட்ராபெரி பழங்களின் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளார்கள்.;

Update: 2023-08-16 18:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சீசன் இல்லாததால் ஸ்ட்ராபெரி பழங்களின் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளார்கள்.

'ஸ்ட்ராபெரி' சீசன் இல்லை

நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் மக்களின் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக பச்சை தேயிலைக்கு உரிய கொள்முதல் விலை கிடைக்காததால், அவர்களின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் மலை காய்கறிகள் மற்றும் ஸ்ட்ராபெரி பழங்களை பயிரிட்டு அதன் மூலம் வருவாய் ஈட்டினர்.

ஆனால் தற்போது சீசன் இல்லாததால், ஸ்ட்ராபெரி பயிரிட்டுள்ள விவசாயிகள் ஸ்ட்ராபெரி நாற்றுக்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து ஸ்ட்ராபெரி பயிரிட்டுள்ள கூக்கல்தொரை பகுதி விவசாயிகள் தெரிவிக்கையில்:- கூக்கல்தொரை, கேர்கம்பை, கீழ் கோத்தகிரி, தூனேரி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஸ்ட்ராபெரி பழங்களை கொய்மலர் குடில்களில் பயிரிட்டுள்ளனர். ஸ்ட்ராபெரி பயிரிடுவதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன் இத்தாலி நாட்டில் இருந்து 700 நாற்றுக்கள் கொண்ட ஒரு பெட்டி நாற்றுக்களை 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தும், புனே மாநிலத்திலிருந்து நாற்றுக்கள் ஒன்றுக்கு ரூபாய் 10 வீதமும் வாங்கி கொய்மலர் குடில்களில் உள்ள மண்ணை பதப்படுத்தி அந்த மண்ணுடன் மாட்டு புழு உரம், ஆடு மற்றும் மாட்டு சாணம், தசகாவியம் பஞ்சகாவியம் ஆகிய இயற்கை உரங்களைக் கலந்து மண்ணை நன்கு பதப்படுத்தி நாற்றுகளை பயிரிட்டோம். சொட்டுநீர் பாசனம் செய்து நாற்றுக்களை நன்கு பராமரித்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஸ்ட்ராபெரி பழங்கள் அறுவடைக்கு தயாராகின. ஆனால் தற்போது சீசன் இல்லாததால் விளைச்சல் குறைந்துள்ளது. ஆனாலும் ஒரு கிலோ ஸ்ட்ராபெரி ரூ.380-க்கு விற்பனை ஆகிறது.

20 ஆயிரம் நாற்றுக்கள்

ேமலும் தற்போது சீசன் இல்லாததால், வருவாய் ஈட்டுவதற்காக நாற்றுக்கள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஒரு ஏக்கரில் ஸ்ட்ராபெரி பயிரிட 20 ஆயிரம் நாற்றுக்கள் தேவைப்படுகிறது. நாங்கள் தயார் செய்த நாற்றுக்களை எங்களது தேவை போக நாற்று ஒன்றுக்கு 13 ரூபாய் முதல் 15 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறோம். எனவே, பழ சீசன் இல்லாவிட்டாலும் நாற்றுக்கள் விற்பனை மூலம் கணிசமான வருவாய் கிடைக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்