தஞ்சை மாவட்டத்தில், வயல்களில் தேங்கி கிடக்கும் வைக்கோல்
தொடர் மழை மற்றும் வெளியூர்வியாபாரிகள் வராததால் வைக்கோல் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் குறைந்த விலைக்கு விற்பனை செய்தாலும் வாங்குவதற்கு ஆள் இல்லை என கோடை நெல் சாகுபடி செய்த விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.;
தொடர் மழை மற்றும் வெளியூர்வியாபாரிகள் வராததால் வைக்கோல் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் குறைந்த விலைக்கு விற்பனை செய்தாலும் வாங்குவதற்கு ஆள் இல்லை என கோடை நெல் சாகுபடி செய்த விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
நெற்களஞ்சியம்
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை) விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும். அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக தண்ணீர் திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.
அதன்படி நடப்பு ஆண்டு குறுவை பாசனத்துக்கு ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மோட்டார்பம்புசெட் மூலம் முன்பட்ட குறுவை எனப்படும் கோடை நெல் சாகுபடியும் அதிக அளவில் நடைபெற்றது. கோடை நெல் சாகுபடி செய்யப்பட்ட இடங்களில் தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வைக்கோல்கள் தேக்கம்
வழக்கமாக குறுவை, சம்பா அறுவடை பணிகள் நடைபெறும் போது வைக்கோல் வாங்குவதற்காக வெளியூரில் இருந்து வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு வருவார்கள். அவர்கள் வைக்கோல்களை வாங்கி லாரிகளில் வெளியூர்களுக்கு எடுத்துச்செல்வார்கள். தமிழகத்தின்பல்வேறு பகுதிகளுக்கும், கேரளாவுக்கும் வைக்கோல் கொண்டு செல்லப்படும். இதனால் விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும்
தற்போது கோடை நெல் அறுவடை பணிகள் முடிந்து வைக்கோல் கட்டுகளை தயார் செய்து விற்பனைக்காக விவசாயிகள் வைத்துள்ளனர். ஆனால் வைக்கோல் கட்டுகளை வாங்குவதற்கு வியாபாரிகள் வராததால் பல்வேறு இடங்களில் நூற்றுக்கணக்கான வைக்கோல் கட்டுகள் ஆங்காங்கே விளைநிலங்களில் தேங்கியுள்ளன. தஞ்சை- பட்டுக்கோட்டை சாலையில் துறையூர், மடிகை பகுதிகளில் வைக்கோல்கள் தேங்கி உள்ளன.
வியாபாரிகள் வரவில்லை
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த காலங்களில் ஒரு கட்டு வைக்கோல் ரூ.150 முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும் இந்த கட்டுகளை கேரளா உள்ளிட்ட பிற மாநில வியாபாரிகள் வந்து போட்டி போட்டுக்கொண்டு வாங்கி செல்வார்கள். ஆனால் சமீப காலமாக தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், வழக்கத்தை விட புல் வரத்து அதிகமாக இருப்பதனாலும் வைக்கோல் விற்பனை பாதிப்படைந்துள்ளது. வைக்கோலை விட புல் விலை மிகவும் குறைவாக இருப்பதனால் மாடுகளை வைத்திருக்கும் உரிமையாளர்கள் வைக்கோலை வாங்கி அதிக அளவில் இருப்பு வைக்க விரும்புவதில்லை. தற்போது ரூ.60 முதல் ரூ.80-க்கு விற்பனை செய்தாலும், வியாபாரிகள் வாங்க முன் வருவதில்லை. மாடுகளை வளர்ப்பவர்கள் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருவதும் இதற்கு ஒரு காரணம் என்றனர்.